×

உலக அளவிலான மக்கள் தொகையில் 2027ல் இந்தியா ‘நம்பர் ஒன்’.. ஐநா வெளியிட்ட ஆய்வில் தகவல்

புதுடெல்லி: வரும் 2027ம் ஆண்டில் உலகிலேயே அதிக மக்கள்தொகை கொண்ட நாடாக இந்தியா இருக்கும் என்று ஐநா வெளியிட்ட ஆய்வில் தெரிவித்துள்ளது. சீனாவுக்கு அடுத்தபடியாக உலகிலேயே அதிக மக்கள்தொகை கொண்ட நாடான இந்தியாவில் 133 கோடி மக்கள் உள்ளனர். அதே சீனாவின் மக்கள்தொகை சுமார் 138 கோடி. இந்நிலையில், 2027ம் ஆண்டில் இந்திய மக்கள்தொகை சீனாவை விஞ்சிவிடும் என்று ஐக்கிய நாட்டு சபை வெளியிட்ட ஆய்வில் கணித்துள்ளது. அதில் கூறப்பட்டிருப்பதாவது:

2065ம் ஆண்டிலிருந்து இந்தியாவின் மக்கள்தொகை குறையத் தொடங்கும். மக்கள்தொகையை கட்டுப்படுத்துவதில் தென் மாநிலங்களின் செயல்பாடு சிறப்பாக உள்ளது. இந்தியாவில் குழந்தைகள் பிறப்பு விகிதத்தைப் பொருத்தவரையில், விந்திய மலைக்கு தெற்கே உள்ள பகுதிகளில் குறைவாகவும், வடக்கே உள்ள பகுதிகளில் அதிகமாகவும் உள்ளது. தமிழகம், தெலங்கானா, ஆந்திரம், கேரளம், கர்நாடகம் ஆகிய தென் மாநிலங்களில், ஒட்டுமொத்த குழந்தைகள் பிறப்பு விகிதம் 1.8 ஆக உள்ளது.

அதே ராஜஸ்தான், பீகார் உள்ளிட்ட வடமாநிலங்களில் விகிதம் 2.3 ஆக உள்ளது. பீகார், உத்தர பிரதேசம் ஆகிய மாநிலங்களில் குழந்தைகள் பிறப்பு விகிதம் தேசிய சராசரியை விட அதிகமாக உள்ளது. வட மாநிலங்களில் வாழும் மக்களின் வாழ்க்கைத் தரத்தைவிட தென் மாநிலங்களில் வாழும் மக்களின் வாழ்க்கை தரம் சிறப்பாக உள்ளது. மக்கள்தொகையை கட்டுப்படுத்த மத்திய அரசு பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொண்டு வருகிறது. 2027ம் ஆண்டில் உலகிலேயே அதிக மக்கள்தொகை கொண்ட நாடாக இந்தியா மாறும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Tags : India, Population, China, UN, Childbirth Rate, Southern States, Northern States, Central Government
× RELATED நீட்-யுஜி கவுன்சிலிங் தேதி ஜன. 19க்கு மாற்றம்