5 புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கையெழுத்து; பூடானின் வளர்ச்சிக்கு உதவுவதில் இந்தியா பெருமை கொள்கிறது; பிரதமர் மோடி

திம்பு: இந்தியா - பூடான் இடையே 5 புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கையெழுத்தாகியுள்ளது. திம்புவில் இந்திய பிரதமர் நரேந்திர மோடி மற்றும் பூடான் பிரதமர் லோட்டே ஷெரிங் முன்னிலையில் 5 புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கையெழுத்தானது. முன்னதாக இந்தியா - பூடான் இணைந்து அமைத்த 720 மெகாவாட் நீர்மின் நிலையத்தை பிரதமர் மோடி திறந்து வைத்தார். பின்னர் பேசிய பிரதமர் மோடி பூடான் நாட்டுடனான உறவை பலப்படுத்த நடவடிக்கை எடுக்கப்படும் என்று உறுதியளித்தார்.

மேலும் பேசிய அவர், 130 கோடி இந்தியர்களின் இதயங்களில் பூடான் சிறப்பு இடத்தை பிடித்துள்ளதாக தெரிவித்த பிரதமர் மோடி, பூடானின் வளர்ச்சிக்கு உதவுவதில் இந்தியா பெருமை கொள்வதாக தெரிவித்தார். இந்தியாவின் நம்பகமான நட்பு நாடாகத் திகழும் பூடானுக்கு, இரண்டு நாள் சுற்றுப்பயணமாக பிரதமர் மோடி, இன்று காலை டெல்லியில் இருந்து புறப்பட்டார். பிரதமர் அந்நாட்டுக்குச் செல்வது இது இரண்டாவது முறை.

பூடானில் இரண்டு நாள்கள் சுற்றுப்பயணத்தின் போது பிரதமர் மோடி அந்த நாட்டு பிரதமர் லோட்டே ஷெரிங், மன்னர் ஜிக்மி கேஷஷர் நம்கியால் வாங்சக் ஆகியோரை சந்தித்து பேசவுள்ளார். அப்போது, இரு நாடுகளுக்கிடையிலான வர்த்தக உறவுகளை, மேலும் பலப்படுத்தும் வகையில் ஒப்பந்தங்கள் மேற்கொள்ள திட்டமிடப்பட்டுள்ளது. குறிப்பாக, பொருளாதார மேம்பாடு,  நீர்மின் உற்பத்தி, மண்டல ரீதியிலான முக்கியத்துவம் வாய்ந்த பிரச்னைகள், இதர விவகாரங்கள் குறித்து இரு தலைவர்களும் விவாதித்தனர்.

Related Stories: