விநாயகர் சதுர்த்திக்கு சிலை நிறுவுவதற்கு அனுமதி வழங்க ஒற்றைச்சாளர முறையை அறிமுகப்படுத்தியது காவல்துறை..!

சென்னை: விநாயகர் சதுர்த்திக்கு சிலை நிறுவுவதற்கு அனுமதி வழங்க ஒற்றைச்சாளர முறையை காவல்துறை அறிமுகப்படுத்தியுள்ளது. வரும் செப்.2-ம் தேதி விநாயகர் சதுர்த்தி கொண்டாடப்படுகிறது. இதனால் இந்து அமைப்புகள் விநாயக்கர் சிலையை நிறுவுவதற்கும், பொதுமக்கள் அவர்களின் தெருவுக்குள் நிறுவுவதற்கும் அனுமதி கேட்டு நடவடிக்கை மேற்கொண்டு வருகின்றனர். குறிப்பாக விநாயகர் சிலையை விநாயகர் சதுர்த்திக்கு நிறுவ வேண்டும் என்றால் பல்வேறு துறை சார்ந்த அனுமதியானது பெறப்பட வேண்டியிருக்கும். குறிப்பாக காவல்துறை, தீயணைப்பு மற்றும் மீட்புத்துறை, மின்சாரத்துறை, மாசுக்கட்டுப்பாட்டு வாரியம், போன்ற பல்வேறு துறைகளில் இருந்து அனுமதி பெற்ற பிறகே சிலைகளை நிறுவுவதற்கு அனுமதியானது வழங்கப்படும்.

இதில் யாரேனும் அனுமதி மறுக்கப்பட்டால் அந்த சிலையை நிறுவ அனுமதி மறுக்கப்படும். குறிப்பாக கடந்த ஆண்டு சென்னையில் 2,500 இடங்களில் விநாயகர் சிலையானது நிறுவுவதற்கு அனுமதி வழங்கப்பட்டது. அதே போன்று இந்த ஆண்டிற்கான அனுமதி வழங்குவதற்கான பணி தொடர்ந்து நடைபெற்று வருகிறது. ஆனால் பல்வேறு துறை அதிகாரிகளை சந்தித்து அனுமதி பெற வேண்டும் என்பதால் மிகுந்த சிரமம் இருப்பதாக பல இந்து அமைப்புகளும், பொதுமக்களும் தெரிவித்துள்ளனர். அதன் அடிப்படையில் காவல் ஆணையர் அலுவலகத்தில் இன்று ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. இதில் சதுர்த்திக்கு சிலை நிறுவுவதற்கு அனுமதி வழங்க ஒற்றைச்சாளர முறையை காவல்துறை அறிமுகப்படுத்தியுள்ளது. சிலை வைக்க விரும்புவர்கள் இனி தனித்தனியாக ஒவ்வொரு துறையிடமும் சென்று அனுமதி வாங்க தேவையில்லை என காவல்துறை அறிவித்துள்ளது.

சென்னையில் 12 காவல் மாவட்டங்களுக்கும் 12 காவல் அதிகாரிகளை பொறுப்பு அதிகாரிகளாக மாநகர காவல்துறை நியமிக்கப்பட உள்ளது. அதன் அடிப்படையில் சிலை நிறுவுவதற்கு அந்த அதிகாரிகளிடம் மட்டும் இந்த மனுவை சமர்ப்பித்தால் போதும், விநாயகர் சிலையை நிறுவுவதற்கான அனைத்து அனுமதியையும் அந்த அதிகாரி பெற்று தருவார். மறுப்பு தெரிவிக்க வேண்டும் என்றால் அந்த சிறப்பு அதிகாரியே மறுப்பு தெரிவிப்பார் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related Stories: