திண்டுக்கல் பகுதியில் விநாயகர் சிலைகள் தயாரிப்பு விறுவிறு

திண்டுக்கல் : விநாயகர் சதுர்த்தியையொட்டி திண்டுக்கல் பகுதியில் சிலைகள் தயாரிப்பு பணி தீவிரமடைந்துள்ளது. நாடு முழுவதும் வரும் செப்.2ம் தேதி விநாயகர் சதுர்த்தி கொண்டாடப்படுகிறது. இதற்காக ஒரு வாரத்திற்கு முன்போ அல்லது 3 நாட்களுக்கு முன்போ விநாயகர் சிலைகளை பிரதிஷ்டை செய்து வழிபட்டு அந்நாளில் நீர்நிலைகளுக்கு ஊர்வலமாக எடுத்து சென்று கரைப்பர். இதையொட்டி திண்டுக்கல் மாவட்டம் முழுவதும் விநாயகர் சிலை தயாரிக்கும் பணியில் சிற்க கலைஞர்கள் மும்முரமாக ஈடுபட்டுள்ளனர்.

திண்டுக்கல் அருகே நொச்சியோடைபட்டியில் களிமண், காகித கூழலால் செய்யப்பட்ட விநாயகர் சிலைகள் விற்பனைக்கு தயார் நிலையில் உள்ளன. இங்கு அரை அடி முதல் 10 அடி வரையிலான விநாயகர் சிலைகள் செய்கின்றனர். இங்கிருந்து மதுரை, கோவை, சேலம், திருச்சி, திருப்பூர் உள்பட மாநிலம் முழுவதும் விநாயகர் சிலைகள் விற்பனைக்கு அனுப்பி வைக்கப்படுகிறது. இந்தாண்டு புதுவரவாக பால கணபதி, ரங்கநாதர், அத்திவரதர், கற்பக விநாயகர், மயில்- சிம்ம வாகனத்தில் அமர்ந்து இருப்பது போன்ற விநாயகர் சிலைகள் தயாரிக்கப்பட்டுள்ளன. முத்து, ரத்தினக்கல் பதிக்கப்பட்ட விநாயகர் சிலைகளும் விற்பனைக்கு வந்துள்ளன.

இதில் சுற்றுச்சூழலுக்கு மாசு இல்லாத களிமண், காகித கூழ், கிழங்கு மாவால், இயற்கை முறையில் தயாரித்த வாட்டர் பெயிண்டிங் பயன்படுத்தப்படுகிறது. சிலைகள் அளவிற்கேற்ப ரூ.100 முதல் ரூ.10 ஆயிரம் வரை விற்கப்படுகிறது.

இதுகுறித்து சிலை தயாரிப்பில் ஈடுபட்டுள்ள கஜேந்திரன் கூறியதாவது, ‘விநாயகர் சதுர்த்திக்கு இன்னும் 14 நாட்களே இருப்பதால் சிலைகள் தயாரிக்கும் பணி வேகமாக நடக்கிறது. தண்ணீருக்கு தட்டுப்பாடு உள்ளதால் விலைக்கு வாங்கி தயார் செய்கிறோம். அதேபோல் சுற்றுச்சூழலுக்கு மாசு இல்லாமலும், எளிதில் கரையும் வண்ணம் களிமண், காகித கூழலால் சிலைகள் செய்கிறோம்’ என்றார்.

Related Stories: