மூணாறு அருகே பெரியகானலில் திடீர் நிலச்சரிவு

*மக்கள் வெளியேற அதிகாரிகள் உத்தரவு

மூணாறு :  மூணாறு அருகே உள்ள பெரியகானல் பகுதியில் நேற்று முன்தினம் நிலச்சரிவு ஏற்பட்டதால், சாலையில் விரிசல் ஏற்பட்டது. இதன் காரணமாக முத்துக்காடு பகுதியில் உள்ள 200 குடும்பங்கள் வேறு இடத்திற்கு மாற வேண்டும் என்று அதிகாரிகள் எச்சரித்துள்ளனர். இதனால் அப்பகுதி மக்கள் பீதியடைந்துள்ளனர். மூணாறு அருகே பெரியகானல் பகுதியில் 60வது ஏக்கர் என்ற இடத்தில் நேற்று முன்தினம் அதிகாலை 3 மணி அளவில் நிலநடுக்கம் ஏற்பட்டது. இதன் காரனமாக பெரிய சத்தத்துடன் சாலைகளில் விரிசல் ஏற்பட்டு  நிலச்சரிவும்  ஏற்பட்டது.

 மேலும் முத்துக்காடு மலைகளின் அருகே உள்ள சாலைகளில் பெரியளவு விரிசல் ஏற்பட்டுள்ளது. இப்பகுதியில் 140 மீட்டர் தூரத்திற்கு நிலச்சரிவு ஏற்பட்டுள்ளது. இடுக்கி மாவட்டம் முழுவதும் தற்போது மழை குறைந்தாலும், திடீரென மழை பெய்தால் சாலையில் ஏற்பட்ட விரிசல் பெரியளவில் சேதத்தை ஏற்படுத்த வாய்ப்புள்ளது என்றுெ அப்பகுதியில் வசிக்கும் மக்கள் கூறினர். மேலும் விரிசல் ஏற்பட்ட பகுதியின்   அடிவாரத்தில் ஏராளமான மக்கள் வசித்து வருகின்றனர். அங்கு ஏலக்காய் ,மிளகு போன்ற விவசாயங்கள் நடந்து வருகிறது.

தோட்டப் பகுதிகளில் குட்டநாடு என்று அறியப்படும் முத்துக்காடு பகுதியில் கடந்த ஆண்டு பெய்த கனமழை மூலம் இங்கு நிலச்சரிவு ஏற்பட்டு பாறைகள் உருண்டதில் பல ஏக்கர் விவசாய நிலங்கள் சேதம் அடைந்தது. இது சம்பந்தமாக 400க்கும் அதிகமான குடும்பங்கள் மாவட்ட கலெக்டரிடம் கோரிக்கை விடுத்தும்  நடவடிக்கை எடுக்கவில்லை என்று கூறப்படுகிறது. இந்நிலையில் தற்போது சாலைகளில் ஏற்பட்டுள்ள விரிசல் மற்றும் நிலச்சரிவு மூலம் இப்பகுதி மக்கள் அச்சம் அடைந்துள்ளனர்.

 இந்த சம்பவத்தை அறிந்து புவியில் நிபுணர்கள் ஆராய்ச்சி மேற்கொண்டதில் மேலும்  நிலச்சரிவு ஏற்பட வாய்ப்புள்ளதாக கூறினார். சம்பவ இடத்தில் தாசில்தார், சின்னக்கானல் பஞ்சாயத்து அதிகாரிகள் நேற்று பார்வையிட்டனர். அப்போது ஆபத்தான பகுதிகளில் உள்ள 200 குடும்பங்கள் பாதுகாப்பான இடத்திற்கு செல்ல வேண்டும் என்று உத்தரவு பிறப்பித்துள்ளனர்.

Related Stories: