எதிர்பார்த்த அளவு இல்லை மேகமலை வனப்பகுதியில் தொடரும் சாரல் மழை

தேனி :  தேனி மாவட்டம் மேகமலை வனப்பகுதியில் இரண்டு நாள் மட்டுமே பலத்த மழை பெய்துள்ள நிலையில், தொடர்ந்து சாரல் மட்டுமே பெய்து வருவதால், எதிர்பார்த்த அளவு மழைநீர் கிடைக்கவில்லை என வனத்துறை அதிகாரிகள் தெரிவித்தனர். தேனி மாவட்டத்தில் வளம் மிகுந்த வனப்பகுதியாக மேகமலை இருந்து வருகிறது. கடந்த மூன்று ஆண்டுகளாகவே இங்கு மழையளவு குறைவாக உள்ளது. இந்த ஆண்டு இதுவரை இரண்டு நாள் மட்டுமே பலத்த மழை பெய்துள்ளது. மற்ற நாட்களில் லேசான சாரல் மட்டுமே பெய்து வருகிறது. மேகமலையில் உள்ள.

ஹைவேவிஸ், மணலாறு, இரவங்கலாறு, துாவானம், வெண்ணியாறு நீர் தேக்கங்கள் கூட இதுவரை முழுமையாக நிறையவில்லை. எல்லா நீர் தேங்கங்களிலும் 75 சதவீதம் மட்டுமே நீர் நிறைந்துள்ளது. மிகவும் சிறிய பேபி டேம் கூட முழுமையாக நிறையவில்லை.சுருளி அருவியில் வனத்தில் மற்ற பகுதியில் பெய்த மழைநீர் வெள்ளமாக வந்தது. சின்னசுருளியிலும் அதே நிலை தான். தற்போது இரண்டு அருவிகளிலும் பெரிய அளவில் வெள்ளம் வரவில்லை.

இதுகுறித்து வனத்துறை அதிகாரிகள் கூறுகையில், `` மேகமலை வனத்தில் தினமும் மாலை 3 மணிக்கு மேல் லேசான சாரல் தொடங்குகிறது. இரவெல்லாம் சாரல் மட்டுமே பெய்கிறது. காலை முதல் பிற்பகல் 3 மணி வரை மழை கிடைப்பதில்லை. இன்னும் ஓரிரு நாளில் நல்ல மழை கிடைக்கும் என எதிர்பார்க்கிறோம். இதுவரை வைகையில் கூட முழுமையாக நீர் வராதது பெரும் ஏமாற்றமாகவே உள்ளது’’ என்று கூறினார்.

தேனியில் திடீர் மழை

தேனி மாவட்டத்தில் கடந்த வாரம் மழை பெய்தது. இதனால் ஆறு, ஓடைகளில்  தண்ணீர் வரத்து அதிகரித்து அணைகளுக்கான நீர்வரத்து அதிகரித்தது.  இதில்  கடந்த இரு நாட்களாக மழை பெய்யாமல் இருந்தது. இந்நிலையில் நேற்று மதியம்  திடீரென தேனியில் சாரல் மற்றும் கனமழை பெய்யத் தொடங்கியது. இதனால்  பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்தனர்.

Related Stories: