அனுமதி வாங்கிய இடத்தை விட்டு மேல்மொணவூர் ஏரியை சுரண்டும் ஆசாமிகள்

வேலூர் : அனுமதி வாங்கிய இடத்தை விட்டு வேறு ஏரியில் கிராவல் மண்ணை அள்ளி செல்பவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கிராம மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.வேலூர் மாவட்டத்தில் ஏரிகளில் முறையான அனுமதி பெற்று கிராவல் மண்ணை அள்ளிக் கொள்ளலாம் என்று கனிமம் மற்றும் சுரங்கத்துறை அறிவித்துள்ளது. அதன்படி, கரடிகுடி ஏரியில் கிராவல் மண்ணை நாள் ஒன்றுக்கு 4 யூனிட்கள் வரை ஆகஸ்ட் 5ம் தேதி வரை அள்ளிக் கொள்ள பள்ளிகொண்டா அடுத்த கொல்லமங்கலத்தை சேர்ந்தவருக்கு அனுமதி  அளிக்கப்பட்டுள்ளது.

ஆனால், அனுமதி பெறப்பட்ட இடத்ைத விட்டு வேலூர் அடுத்த மேல்மொணவூர் ஏரியில் முறை மீறி தினமும் ஜேசிபி இயந்திரம் மூலம் பல யூனிட்டுகள் கிராவல் மண் அள்ளிச் செல்லப்படுவதாகவும் மேல்மொணவூர் கிராம மக்கள் புகார் தெரிவித்துள்ளனர். இதேபோல் மாவட்டம் முழுவதுமே அனுமதி பெற்ற இடத்தை விட்டு தங்கள் இஷ்டத்துக்கு ஏரி மண்ணை அள்ளி செல்வதாகவும் புகார் எழுந்துள்ளது. இதுதொடர்பாக கனிமம் மற்றும் சுரங்கத்துறை அதிகாரிகளிடம் கேட்டபோது, ‘அனுமதி பெற்ற இடத்தில் மட்டுமே கிராவல் மண்ணை எடுக்க வேண்டும். வேறு இடங்களில் எடுத்தாலோ அனுமதிக்கப்பட்ட அளவை விட அதிகமாக எடுத்தாலோ நடவடிக்கை எடுக்கப்படும். புகார் குறித்து விசாரித்து நடவடிக்கை எடுக்கப்படும்’ என்றனர்.

Related Stories: