×

கல்லணையில் இருந்து டெல்டா பாசனத்திற்கு தண்ணீர் திறப்பு: 6 அமைச்சர்கள், ஆட்சியர்கள், விவசாய சங்க பிரதிநிதிகள் பங்கேற்பு

தஞ்சை: தஞ்சை மாவட்டம் கல்லணையில் இருந்து டெல்டா பாசனத்திற்கு தண்ணீர் திறக்கப்பட்டுள்ளது. ஒவ்வொரு ஆண்டும் குறுவை சாகுபடிக்காக ஜூன் 12-ம் தேதி மேட்டூர் அணை திறப்பது வழக்கம். ஆனால் இந்த ஆண்டு போதிய தண்ணீர்  இல்லாததால் அணை திறக்கப்படவில்லை. இந்நிலையில் கர்நாடகாவில் கடந்த சில நாட்களாக பெய்து வரும் கனமழை காரணமாக அங்குள்ள அணைகள் அனைத்தும் நிரம்பியதால், காவிரி ஆற்றில் உபரி நீர் திறக்கப்பட்டது. இதனால், மேட்டூர்  அணையின் நீர்மட்டம் கிடுகிடுவென உயர்ந்து இன்னும் சில நாட்களில் முழு கொள்ளளவை எட்ட வாய்ப்புள்ளது. இந்நிலையில் கடந்த 13-ம் தேதி காவிரி டெல்டா பகுதியில் ஒருபோக சம்பா சாகுபடிக்காகவும், பொதுமக்களின் குடிநீர்  தேவைக்காகவும், மேட்டூர் அணையில் இருந்து தண்ணீர் திறக்கப்பட்டது. இந்த தண்ணீர் கரூர், திருச்சி வழியாக கல்லணையை வந்தடைகிறது.

இதையடுத்து, கல்லணையிலிருந்து காவிரி, வெண்ணாறு, கல்லணைக் கால்வாய், கொள்ளிடம் ஆறுகளில் ஒரு போக சம்பா சாகுபடிக்காக தண்ணீர் திறந்து விடப்பட்டது. கல்லணையில் உள்ள காவிரியில் 1000 கன அடியும், வெண்ணாற்றில் 1000  கன அடியும், கல்லணைக் கால்வாயில் 500 கன அடியும் மற்றும் கொள்ளிடம் ஆற்றில் 1000 கன அடி தண்ணீர் திறக்கப்பட்டது. விழாவில் அமைச்சர்கள் துரைக்கண்ணு, விஜயபாஸ்கர், காமராஜ், வெல்லமண்டி நடராஜன், வளர்மதி,  ஓ.எஸ்.மணியன் மற்றும் திருச்சி, தஞ்சை, திருவாரூர், நாகை, புதுக்கோட்டை, கடலூர் மாவட்ட ஆட்சியர்களும் பங்கேற்றனர். மேலும் பொதுப்பணித்துறை வேளாண்மைத் துறை சார்ந்த அதிகாரிகள், விவசாய சங்க பிரதிநிதிகள் கலந்து  கொண்டனர்.

கடந்த 8 ஆண்டுகளாக குறுவை சாகுபடி பாதிக்கப்பட்டுள்ள நிலையில், தற்போது திறக்கப்படும் தண்ணீர் கடைமடை வரை சென்று சேர உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர். மேலும் முறை  வைக்காமல் அனைத்து ஏரி, குளங்களை நிரப்ப வேண்டும் என்றும் வலியுறுத்தியுள்ளனர்.தண்ணீர் திறப்பு மூலம் தஞ்சை, நாகை, திருவாரூர், புதுக்கோட்டை, கடலூர், காரைக்கால் மாவட்டங்களில் 12 லட்சம் ஏக்கர் பரப்பளவில் சாகுபடி  நடைபெறும் என எதிர்பார்க்கபப்டுகிறது.

Tags : 6 Ministers, administrators and representatives of Agrarian Society participated
× RELATED தமிழக கவர்னர் பூஸ்டர் தடுப்பூசி போட்டுக் கொண்டார்