×

சிறப்பு அந்தஸ்து ரத்துக்கு எதிரான வழக்கு விசாரணை காஷ்மீரில் விதித்த கட்டுப்பாடுகள் படிப்படியாக நீக்கப்பட்டு வருகிறது: உச்ச நீதிமன்றத்தில் மத்திய அரசு தகவல்

புதுடெல்லி காஷ்மீர் மாநிலத்தின் சிறப்பு அந்தஸ்த்தை ரத்து செய்ததற்கு எதிராக தாக்கல் செய்யப்பட்டுள்ள மனுவில் உள்ள பிழைகளை திருத்தி, புதிய மனு தாக்கல் செய்யும்படி மனுதாரருக்கு உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இந்திய அரசியல் சட்டம் 370வது பிரிவின்படி காஷ்மீர் மாநிலத்துக்கு வழங்கப்பட்டு இருந்த சிறப்பு அந்தஸ்தை மத்திய அரசு சமீபத்தில் ரத்து செய்தது. அத்துடன் அந்த மாநிலம் 2 யூனியன் பிரதேசங்களாகவும் பிரிக்கப்பட உள்ளது. இந்த நடவடிக்கைகளுக்கு காஷ்மீரில் கடும் எதிர்ப்பு கிளம்பியதால் அங்கு 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக  பல்வேறு கட்டுப்பாடுகளும் விதிக்கப்பட்டுள்ளன. தொலைத்தொடர்பு சேவை, இன்டர்நெட் சேவைகள் முற்றிலும் துண்டிக்கப்பட்டுள்ளன. இந்த நிலையில், ஜம்மு-காஷ்மீருக்கான சிறப்பு அந்தஸ்தை ரத்து செய்து  ஜனாதிபதி பிறப்பித்த உத்தரவை எதிர்த்து, டெல்லி மூத்த வழக்கறிஞர் எம்.எல்.சர்மா உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். அதில் அவர், ‘ஜம்மு-காஷ்மீருக்கான சிறப்பு அந்தஸ்தை ரத்து செய்து ஜனாதிபதி பிறப்பித்த உத்தரவு,  அரசியலமைப்பு சட்டத்துக்கு முரணானது என்று நீதிமன்றம் அறிவிக்க வேண்டும்,’ என குறிப்பிட்டார். இதேபோல், காஷ்மீரில் செய்தி சேகரிக்க முடியவில்லை என்று டைம்ஸ் பத்திரிக்கையின் ஆசிரியர் அனுராதா பாசின் என்பவரும் மனு தாக்கல் செய்திருந்தார்.

இந்த இரண்டு மனுக்களோடு சேர்த்து காஷ்மீர் விவகாரத்திற்கு எதிராக மொத்தம் ஆறு மனுக்கள் உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டுள்ளன. இதில் காஷ்மீர் சிறப்பு அந்தஸ்துக்கு எதிராக எம்.எல்.சர்மா மற்றும் பத்திரிகை ஆசிரியர் அனுராதா பாசின் ஆகியோர் தாக்கல் செய்த மனுக்களை மட்டும் ஆகஸ்ட் 16ம் தேதி விசாரிப்பதாக அறிவிக்கப்பட்டிருந்தது. இந்த நிலையில், இந்த இரு மனுக்களும் உச்ச நீதிமன்றத்தின் தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய், நீதிபதிகள் எஸ்.ஏ.பாப்டே மற்றும் அப்துல் நசீர் ஆகியோர் அமர்வில் நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது, மனுதாரர் எம்.எல்.சர்மா வாதிடுகையில், “காஷ்மீர் மாநிலத்திற்கு வழங்கப்பட்டு இருந்த சிறப்பு அந்தஸ்து ரத்து என்ற ஜனாதிபதியின் ஒப்புதலை ரத்து செய்து நீதிமன்றம் உத்தரவிட வேண்டும்,’’ என வாதிட்டார்.

பத்திரிக்கை ஆசிரியர் அனுராதா பாசின் தரப்பு வாதத்தில், “காஷ்மீரில் பத்திரிகையாளர்கள் செய்தி சேகரிக்க அனுமதிக்கப்படவில்லை. அங்குள்ள நிலைமை குறித்து செய்தி வெளியிட்டால் தான் பிற மக்களுக்கும் காஷ்மீரின் நிலை வெளிப்படையாக தெரியவரும். மேலும், காஷ்மீரில் தொலைத்தொடர்பு சாதனங்கள் முழுமையாக முடக்கப்பட்டுள்ளது. அங்கு இருக்கும் யாரையும் தொடர்பு கொள்ள இயலவில்லை. இதில் முக்கியமாக காஷ்மீர் பகுதிகளில் பத்திரிகைகள் கூட வெளியிட முடியவில்லை என்பது எங்கள் சுதந்திரத்துக்கு எதிரானதாகும்,’’ என வாதிடப்பட்டது.

இதேபோல் மத்திய அரசு தரப்பில் ஆஜரான தலைமை வழக்கறிஞர் கே.கே.வேணுகோபால், “காஷ்மீர் பகுதியில் பத்திரிக்கை வெளியிடவோ அல்லது செய்தி சேகரிக்கவோ எந்த தடையும் விதிக்கப்படவில்லை. இதில் குறிப்பாக டைம்ஸ் பத்திரிக்கை ஏன் வெளியாகவில்லை என்பது தெரியவில்லை. மேலும், சட்டம் ஒழுங்கை பொருத்தமட்டில் கட்டுப்பாட்டில்தான் உள்ளது. மேலும், அங்கு விதிக்கப்பட்டுள்ள கட்டுப்பாடுகள் அனைத்தும் படிப்படியாக நீக்கப்பட்டு வருகிறது,’’ என்றார்.


‘எல்லா மனுக்களும் தப்பு தப்பா இருக்கு’:
இந்த வழக்கில் மனுதாரர்களின் வாதங்களை கேட்ட பிறகு தலைமை நீதிபதி கோகாய் பிறப்பித்த உத்தரவில், “மனுதாரர் எம்.எல்.சர்மா உங்களின் கோரிக்கை என்ன? காஷ்மீர் விவகாரத்தில் என்ன நிவாரணம் எதிர்பார்க்கிறீர்கள்? உங்கள் மனுவை படித்து புரிந்து கொள்ள சுமார் அரை மணி நேரமாக முயன்றேன். ஆனால், முடியவில்லை. அதில் எந்த விவரமும் சரியாக இல்லை. இருப்பினும், இந்த மனுவை நீதிமன்றம் உடனடியாக தள்ளுபடி செய்யவும் விரும்பவில்லை. ஆனால், சரியான கோணத்தில் விசாரணை மேற்கொள்ளாமல் எந்த உத்தரவும் பிறப்பிக்க முடியாது. ஏனெனில், அது மோசமான ஆபத்தான விளைவுகளை ஏற்படுத்தி விடும். இதில், நாங்கள் உங்கள் கருத்தை முழுவதுமாக கேட்கிறோம். அதனால், என்ன மாதிரியான நிவாரணம் வேண்டும் என்பதை மனுவில் உள்ள அனைத்து பிழைகளையும் சரி செய்து, தெளிவாக மீண்டும் நீதிமன்றத்தின் பதிவாளர் அலுவலகத்தில் புதிய மனு தாக்கல் செய்யுங்கள். உங்கள் மனுவோடு சேர்த்து காஷ்மீரின் சிறப்பு அந்தஸ்து ரத்து எதிராக தாக்கல் செய்யப்பட்டுள்ள அனைத்து மனுக்களும் பிழையாகதான் உள்ளன,’’ என உத்தரவிட்டார்.காஷ்மீரில் இருக்கும் கட்டுப்பாடுகளை நீக்குவது தொடர்பாக பத்திரிக்கை ஆசிரியர் அனுராதா பாசின் தாக்கல் செய்த மனு குறித்தும் நீதிபதிகள் எந்த உத்தரவையும் பிறப்பிக்கவில்லை.

அரசு அலுவலகங்கள்  19 முதல் செயல்படும்:
காஷ்மீர் மாநிலத்தில் கடந்த 5ம் தேதி  முதல் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டு, மாநிலத்தின் பிரபல அரசியல் கட்சி தலைவர்கள் வீட்டுச் சிறையில் அடைக்கப்பட்டனர். கடைகள், பள்ளிகள் மற்றும் வணிக நிறுவனங்கள் மூடப்பட்டதால் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டது.  நகரில் விதிக்கப்பட்டிருந்த கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்ட நிலையில், மாநிலத்தின் பிறபகுதிகளில் நேற்று 12வது நாளாக கட்டுப்பாடுகள் நீடித்தன. இந்த நிலையில், காஷ்மீர் மாநில மூத்த அரசு அதிகாரி ஒருவர் நேற்று கூறியதாவது:  காஷ்மீர் சமவெளி பகுதியில் பெரும்பாலான இடங்களில் விதிக்கப்பட்டிருந்த கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்டுள்ளன. நிலைமைக்கு ஏற்ப மேலும் சில இடங்களில் கட்டுப்பாடுகள் நீக்கப்படும். வரும் 19ம் தேதி முதல் காஷ்மீரில் அனைத்து அரசு அலுவலகங்களும் செயல்பட தொடங்கும். பள்ளிகள் அடுத்த வாரம் முதல் திறக்கப்படும். அதே நேரம், காஷ்மீரில் தொலைத்தொடர்பு வசதியை மீண்டும் கொண்டு வருவது தொடர்பாக எந்த முடிவும் எடுக்கவில்லை. தொலைபேசி, இன்டர்நெட் சேவைகளை கொண்டு வர விரும்பினால் அதை படிப்படியாக செயல்படுத்துவோம். மேலும், நிலைமை மேம்பட்டால் ராணுவத்தின் பாதுகாப்பையும் ரத்து செய்வோம்,’’ என்றார்.

தகவல் தொடர்பு சாதனமான டிவி காஷ்மீரில் செல்ேபான், தொலைபேசி, இன்டர்நெட் சேவை துண்டிக்கப்பட்டு உள்ளதை தொடர்ந்து பொது தொலைபேசி நிலையங்கள் 300 ஆக குறைக்கப்பட்டுள்ளது.  இதனால், வேறுமாநிலங்களில் உள்ள தங்கள் குடும்பத்தினர் மற்றும் வெளிநாட்டில் உள்ள உறவினர்கள் நண்பர்களை தொடர்பு கொள்ள முடியாத நிலையில் காஷ்மீர் மக்கள் உள்ளனர். அவர்களுக்கு தற்போது தகவல் தொடர்பு சாதனமாக செயல்படுவது உள்ளூர் மற்றும் மண்டல அளவிலான செய்தி சேனல்களே. இவை வெளிமாநிலங்களில் உள்ள உறவினர்கள் அனுப்பும் தகவல்களை காஷ்மீர் மக்களுக்கு தொலைக்காட்சியில் குறுஞ்செய்தியாக தருகிறது. அதை பார்க்கும் காஷ்மீர் மக்கள், அதே டிவி சேனல்கள் மூலம் தங்கள் பதில்களை குறுஞ்செய்தியாக அளிக்கின்றனர்.




Tags : Abolition of Special Status, Kashmir, Supreme Court, Central Government
× RELATED தமிழக கவர்னர் பூஸ்டர் தடுப்பூசி போட்டுக் கொண்டார்