கேரளாவில் முதன் முதலாக முத்தலாக் தடை சட்டத்தில் சிறைக்கு சென்றார் வாலிபர்

திருவனந்தபுரம்: கேரளாவில் முத்தலாக் தடை சட்டத்தின் கீழ் முதன் முதலாக ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். நாடாளுமன்றத்தில் முத்தலாக் தடை சட்டம் சமீபத்தில் கொண்டு வரப்பட்டது. இந்த சட்டத்தில் முதன் முதலாக கடந்த வாரம் டெல்லியில் ஒருவர் கைது செய்யப்பட்டார்.  இந்நிலையில், கேரளாவில் நேற்று முத்தலாக் தடை சட்டத்தின் கீழ் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். கோழிக்கோடு அருகே உள்ள செறுவாடி பகுதியை சேர்ந்தவர் உசாம். இவருக்கும் கோழிக்கோடு முக்கம் பகுதியை சேர்ந்த ஒரு பெண்ணுக்கும் கடந்த 2011ம் ஆண்டு  திருமணம் நடந்தது.  சில நாட்களுக்கு முன் இவர் தனது மனைவியை முத்தலாக் கூறி விவகாரத்து செய்ததாக கூறப்படுகிறது.  இதையடுத்து, அந்த பெண் தாமரசேரி நீதிமன்றத்தில் கணவனுக்கு எதிராக வழக்கு தொடர்ந்தார். இதை விசாரித்த நீதிமன்றம் உசாமை கைது செய்ய உத்தரவிட்டது.  இதையடுத்து, முக்கம் போலீசார் முத்தலாக் தடை சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்து உசாமை கைது செய்து சிறையில் அடைத்தனர். இதன்மூலம் தனக்கு நீதி கிடைத்துள்ளதாக இளம் பெண் கூறினார்.

Related Stories: