ஒரே நாடு, ஒரே ரேஷன் கார்டு திட்டத்தால் தமிழகத்துக்கு எந்த பாதிப்பும் இல்லை: அமைச்சர் செல்லூர் ராஜூ பேட்டி

திருச்சி: ஒரே நாடு, ஒரே ரேஷன் கார்டு திட்டத்தால் தமிழகத்துக்கு எந்த பாதிப்பும் இல்லை என்று திருச்சியில் அமைச்சர் செல்லூர் ராஜூ கூறினார்.டெல்டா  மாவட்டங்களில் சம்பா சாகுபடி செய்யும் விவசாயிகளுக்கு பயிர்க்கடன் மற்றும்  இடுபொருட்கள் வழங்குவது தொடர்பான ஆலோசனை கூட்டம் திருச்சி கலெக்டர்  அலுவலகத்தில் நேற்று நடந்தது. இதில் கலந்து கொண்ட தமிழக கூட்டுறவுத்துறை  அமைச்சர் செல்லூர் ராஜூ அளித்த பேட்டி: எதிர்பார்த்தபடி  காவிரியில் தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது. இந்த வாரத்துக்குள் மேட்டூர்  அணை நிரம்பி விடும் என்று எதிர்பார்க்கிறோம். தமிழக  விவசாயிகளுக்கு இந்தாண்டு ₹10,000 கோடி வட்டியில்லா பயிர்க்கடன் வழங்க  இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இதில் டெல்டா மாவட்டங்களில் மட்டும்  ₹2340 கோடி வழங்கப்பட உள்ளது. 2011 முதல் கடந்தாண்டு வரை 83 லட்சம்  விவசாயிகளுக்கு ₹43,000 கோடி வட்டியில்லா பயிர்கடன் வழங்கப்பட்டுள்ளது.

மத்திய  அரசின் ஒரே நாடு ஒரே ரேஷன் கார்டு திட்டத்தால், தமிழகத்துக்கு எந்த பாதிப்பும்  இல்லை. வெளிமாநிலத்தில் உள்ளவர்கள் தமிழகத்தில் உள்ள சட்ட திட்டங்களுக்கு  உட்பட்டு இங்குள்ள கடைகளில் பொருட்கள் வாங்கிக்கொள்ளலாம். நீலகிரியில்  மழை சேதம் குறித்து குழுவினர் கணக்கெடுப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். இந்த  அறிக்கை வந்ததும் முதல்வர் எடப்பாடி பழனிசாமி பிரதமர் மோடியை சந்தித்து,  வேண்டிய நிவாரண தொகையை கேட்டுப்பெறுவார். தமிழகத்தில் பயிர் கடன் தள்ளுபடி  சாத்தியமில்லை. இவ்வாறு அவர் கூறினார்.

Related Stories: