×

கவர்னர் முட்டுக்கட்டை போடவில்லையென்றால் புதுச்சேரியை இந்தியாவின் முதன்மை மாநிலமாக்குவோம்: முதல்வர் நாராயணசாமி உறுதி

வில்லியனூர்: கவர்னர் முட்டுக்கட்டை போடவில்லையென்றால் புதுச்சேரியை இந்தியாவின் முதன்மை மாநிலமாக மாற்றுவோம் என முதல்வர் நாராயணசாமி கூறியுள்ளார்.  புதுவை அரசின் கலை பண்பாட்டு மையம் சார்பில் இந்தியாவுடன் புதுச்சேரி இணைக்கப்பட்ட சட்டப்பூர்வ பரிமாற்ற நாள் புதுச்சேரி வில்லியனூர் அருகே உள்ள கீழுர் நினைவிடத்தில் நேற்று காலை கொண்டாடப்பட்டது. இதில் முதல்வர் நாராயணசாமி கலந்துகொண்டு பேசியதாவது: பிரெஞ்சு ஏகாதிபத்தியத்தை எதிர்த்து புதுவை சுதந்திரம் பெற வேண்டும். இந்திய நாட்டுடன் இணைய வேண்டும் என முத்துகுமாரப்பரெட்டியார், வெங்கடசுப்பா ரெட்டியார், சுப்புராயநாயக்கர், சுப்பையா, அன்சாரி துரைசாமி ஆகியோர் அரும்பாடுபட்டனர். பல போராட்டங்களை நடத்தினர். கீழுர் பகுதியை அவர்கள் தேர்ந்தெடுத்து வாக்கெடுப்பு நடத்தினர். அப்படித்தான் நாம் சுதந்திரம் பெற்றோம். 1964 ம் ஆண்டு நாம் முழுமையாக இந்தியாவுடன் இணைந்தோம்.

ஆண்டுதோறும் ₹400 கோடி வருமானத்தை அதிகமாக ஈட்டி வருகிறோம்.  கவர்னர் நம் கையை கட்டியிருக்கும்போதே நாம் இப்படி சாதனை படைக்கிறோம், நம் கையை விடுவித்து விட்டால் புதுவை மாநிலத்தை இந்தியாவில் முதன்மையான மாநிலமாக மாற்றுவோம்,  இவ்வாறு அவர் பேசினார். விழாவில் அமைச்சர்கள் நமச்சிவாயம், கந்தசாமி, சபாநாயகர் சிவக்கொழுந்து, தலைமை செயலர் அஸ்வனிகுமார், மாவட்ட ஆட்சியர் அருண், டிஜிபி பாலாஜி வஸ்தவா உள்பட பலர் கலந்துகொண்டனர். முன்னதாக விழா தொடங்குவதற்கு அரை மணி நேரத்திற்கு முன்பாகவே கவர்னர் கிரண்பேடி கீழுர் வந்து நினைவிடத்திற்கு அஞ்சலி செலுத்திவிட்டு சென்றது குறிப்பிடத்தக்கது.



Tags : கவர்னர் ,முட்டுக்கட்டை , புதுச்சேரி,முதல்வர் நாராயணசாமி
× RELATED உள்ளத்தில் அன்பு பொங்கட்டும்! ...