காரைக்காலில் இருந்து மது கடத்திய திருச்சி போலீஸ்காரர் தப்பி ஓட்டம்

திருச்சி: காரைக்காலில் இருந்து மது கடத்தி வந்த திருச்சி போலீஸ்காரின் காரை சோதனை போட முயன்றபோது அவர் காரை விட்டு விட்டு தப்பி ஓடினார். காரில் 350 மதுபாட்டில்கள் பறிமுதல் செய்யப்பட்டது. திருச்சி மாநகரில் அதிக அளவு போதை பொருள் நடமாட்டம் இருப்பதாக மாநகர போலீஸ் கமிஷனர் அமல்ராஜுக்கு தகவல் கிடைத்தது. இதையொட்டி கஞ்சா, மற்றும் வெளிமாநில மது, போலி மது கடத்தலை கண்டறிய தனிப்படைகள் அமைக்கப்பட்டது.இந்த தனிப்படையினர் மாநகரின் பல்வேறு பகுதிகளை கண்காணித்து வருகிறார்கள். நேற்றுமுன்தினம் அதிகாலை திருச்சி ஏர்போர்ட் செக்போஸ்ட் அருகே போலீசார் வழக்கமான வாகன தணிக்கை நடத்திக்கொண்டிருந்தனர்.

அப்போது அந்த வழியாக ஒரு சொகுசு கார் வந்தது. சந்தேகத்தின்பேரில் அந்த காரை சோதனை போட போலீசார், காருக்கு அருகே சென்றனர். அப்போது காரில் இருந்த ஒரு வாலிபர் காரை விட்டு இறங்கி தப்பி ஓடினார். போலீசார் அந்த வாலிபரை பிடிக்க முயன்றனர். அதற்குள் அவர் தப்பி விட்டார். இதன்பின், காரை திறந்து சோதனையிட்டனர்.  அப்போது 350 மது பாட்டில்கள் இருந்தது. இவை புதுச்சேரி மாநிலம் காரைக்காலில் இருந்து கடத்தி வரப்பட்டது என்பது தெரியவந்தது. இதையடுத்து காரில் உள்ள ஆவணங்களை சோதனை செய்தபோது அந்த காரை ஏர்போர்ட் பகுதியை சேர்ந்த இதயத்துல்லா (35) என்பவர் ஓட்டி வந்தது தெரியவந்தது. இவர் மணப்பாறை காவல் நிலையத்தில் போலீஸ்காரராக பணியில் இருப்பதும் தெரியவந்தது.

இவர் ஏற்கனவே, இதுபோன்று திருட்டுதனமாக மதுவை வீட்டில் பதுக்கி வைத்து கூடுதல் விலைக்கு விற்பனை செய்து சஸ்பெண்ட் ஆனவர் என்பதும் தெரிய வந்துள்ளது. தொடர்ந்து அவரை போலீசார் தேடி வருகின்றனர்.

Related Stories: