கன மழையால் பாதிக்கப்பட்டுள்ள நீலகிரி மாவட்டத்துக்கு முதல்கட்டமாக 1000 கோடி நிதியுதவியை அறிவியுங்கள்: முதல்வருக்கு மு.க.ஸ்டாலின் கோரிக்கை

சென்னை: கனமழையால் பாதிக்கப்பட்டுள்ள நீலகிரி மாவட்டத்துக்கு முதல்கட்டமாக ரூ.1000 கோடி நிதியுதவியை அறிவிக்க  வேண்டும் என்று திமுக தலைவரும், எதிர்க்கட்சி தலைவருமான மு.க.ஸ்டாலின் முதல்வர் எடப்பாடிக்கு கோரிக்கை விடுத்துள்ளார். இதுகுறித்து முதல்வர் எடப்பாடியின் நேர்முக செயலாளர் மற்றும் தலைமை செயலாளர் சண்முகம் ஆகியோரை திமுக எம்எல்ஏக்கள் மா.சுப்பிரமணியன், சேகர்பாபு ஆகியோர் நேற்று தலைமை செயலகத்தில் சந்தித்து, எதிர்க்கட்சி தலைவர் மு.க.ஸ்டாலின் கொடுத்து அனுப்பிய கடிதத்தை வழங்கினர். அந்த கடிதத்தில் கூறி இருப்பதாவது: கடந்த 5, 6, 9 ஆகிய தேதியில் பெய்த கனமழையினால் நீலகிரி மாவட்டம் நிலைகுலைந்து போயுள்ளது. அதன் காரணமாக ஆயிரக்கணக்கான மக்கள் அனுபவிக்கும் துயரத்தை எதிர்க்கட்சி தலைவர் என்ற முறையில் நான் நேரில் சென்று பார்வையிட்டேன். மண் சரிவுகளால் உயிர் சேதமும், உடைமைகளுக்கு பாதிப்பும் ஏற்பட்ட மக்களை பார்த்து ஆறுதல் கூறுவது பொறுப்புள்ள எதிர்க்கட்சி தலைவரின் கடமை. இதில் விளம்பர நோக்கம் எதுவும் இல்லை.

Advertising
Advertising

கருணாநிதி முதல்வராக இருந்தபோது நீலகிரி மாவட்டத்தில் துவங்கப்பட்ட நீர்வழிச்சாலைகள் அமைக்கும் திட்டத்தை நிறைவேற்றி இருந்தால் அங்கே மண் சரிவுகளை பெரும் அளவுக்கு தடுத்திருக்க முடியும். கனமழை பெய்யும் என்று வானிலை ஆராய்ச்சி மையம் அறிவித்தவுடன், அரசு உரிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்திருந்தால் பாதிப்புகளை குறைத்திருக்க முடியும். கனமழை, மண் சரியில் சிக்கி உயிரிழந்த 5 பேரின் குடும்பத்திற்கு தலா ரூ.1 லட்சம் நிதியுதவி அளித்துவிட்டு, திமுக எம்பி, எம்எல்ஏக்களின் தொகுதி மேம்பாட்டு நிதியில் இருந்து ரூ.10 கோடி நீலகிரி மாவட்ட மறு சீரமைப்பு பணிகளுக்காக ஒதுக்குவதாக அங்கேயே அறிவித்திருக்கிறேன்.கூடலூர் சட்டமன்ற தொகுதியே காணாமலே போய்விடும் அளவிற்கு அடையாளங்கள் சிதைந்து, பாதிப்பு கடுமையாக இருக்கிறது. 10 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மக்கள் வீடுகளை இழந்து நிவாரண முகாம்களில் தஞ்சமடைந்துள்ளனர். 20 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மக்கள் கனமழையிலும், மண்சரிவுகளிலும் சிக்கிக்கொண்டு உயிர் பிழைத்தால் போதும் என்று தப்பிச் செல்லும் அவல நிலைக்கு தள்ளப்பட்டனர்.

அரசு செய்திக்குறிப்பில், 17 சாலைகள் முழுமையாகவும், 150 சாலைகள் ஒரு பகுதியாகவும் பாதிக்கப்பட்டுள்ளது என்று கூறப்பட்டுள்ளது. ஆனால், 350 கிலோ மீட்டருக்கும் நீளமான சாலைகள் கடுமையாக சேதமாகி உள்ளது. நீலகிரி மாவட்டத்தின் சாலை உட்கட்டமைப்பே அடியோடு சிதறி போயிருக்கிறது. அதனால்தான், நீலகிரி மாவட்டத்தை பேரிடரால் பாதிக்கப்பட்ட மாவட்டமாக அறிவிக்க வேண்டும் என்று கூறினேன். ஆனால் மறுசீரமைப்பு பணிகளுக்கு ரூ.199 கோடி என்று அரசு மதிப்பீடு செய்திருப்பது நிச்சயம் போதுமானதல்ல. இது அவசர கதியில் செய்யப்பட்ட மதிப்பீடாகவே இருக்க முடியும். ஆகவே கனமழையால் பாதிக்கப்பட்டுள்ள சாலை உட்கட்டமைப்பை சீரமைக்கவும், மண்சரிவுகளால் வீடுகளை இழந்து தவிப்போருக்கு புதிய வீடு கட்டிக் கொடுக்கவும் நீலகிரி மாவட்டத்திற்கு முதற்கட்டமாக ரூ.1000 கோடி நிதியுதவி அறிவிக்க வேண்டும்.

பாதிக்கப்பட்ட வீடுகளை முறையாக புதுப்பிக்காமல், தற்போது முகாம்களில் இருப்போரை திருப்பி அனுப்பும் நடவடிக்கைகளை தவிர்க்க வேண்டும். நீலகிரி மாவட்டத்தை பேரிடர் பாதித்த மாவட்டமாக அறிவித்து, மத்திய அரசிடம் இருந்து உடனடியாக பேரிடர் நிதியை பெற்று, `ரிவிட்மென்ட்’ செய்வது உள்ளிட்ட பல்வேறு மறு சீரமைப்பு பணிகளை மேற்கொண்டு, நீலகிரி மக்கள் சகஜ வாழ்க்கை திரும்ப போர்க்கால அடிப்படையில் நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்.

உயிரிழந்தோர் குடும்பங்களுக்கு அரசு சார்பில் அளிக்கப்பட்டுள்ள ரூ.10 லட்சம் நிதி போதாது என்பதால், அவர்களின் குடும்பத்தில் ஒருவருக்கு அரசு வேலை வழங்க வேண்டும். கனமழை மற்றும் மண் சரிவுகளில் இருந்து எதிர்காலத்தில் இதுபோன்ற பாதிப்புகள் நீலகிரி மாவட்டத்தில் ஏற்படாமல் இருக்க ஒரு வல்லுநர் குழு அமைத்து சிறப்பு திட்டம் ஒன்றை உருவாக்கி செயல்படுத்த அரசு முன்வர வேண்டும். பாதிக்கப்பட்டவர்களுக்கு அரசு நிவாரண உதவிகளை, அனைத்துக்கட்சி குழு அமைத்து அவர்கள் முன்னிலையில் வழங்க வேண்டும். இவ்வாறு மு.க.ஸ்டாலின் கேட்டுக் கொண்டுள்ளார்.

Related Stories: