வலுவாக இருக்கிறோம்... பயிற்சியாளர் பாஸ்கரன் உற்சாகம்

இந்த சீசனில் வலுவான அணியாக இருக்கிறோம். கடந்த முறை போல காயங்களால் வீரர்கள் அவதிப்படும் பிரச்சினைகள் எதுவும் இல்லை என்று தமிழ் தலைவாஸ் அணி பயிற்சியாளர் இடைச்சேரி  பாஸ்கரன் கூறினார். இதுகுறித்து சென்னையில் நேற்று அவர் செய்தியாளர்களிடம் பேசும்போது, ‘தவறுகளிலிருந்து பாடம் கற்று வருகிறோம். இந்த சீசனில் ஒவ்வொரு அணியும் வலுவான அணிதான். அதேபோல் எங்கள் அணியும் இந்த முறை வலுவான அணியாக உள்ளது. கடந்த முறை போன்று காயங்களால் வீரர்கள் அவதிப்படும் பிரச்சினைகள் ஏதுமில்லை. வீரர்கள் ஆரோக்கியமாக இருக்கிறார்கள். ஒவ்வொரு போட்டிக்கு முன்பும் எதிரணியின் சாதக பாதகங்களை ஆராய்ந்து களம் இறங்குகிறோம்‌. முன்னணி தமிழ் வீரர்களின் விலை அதிகமாக இருப்பதால் எங்கள் அணியால் அவர்களை ஏலம் எடுக்க முடியவில்லை. அதனால் தமிழகத்தை சேர்ந்த இரண்டு அறிமுக வீரர்களை பயன்படுத்த இருக்கிறோம். அவர்களுக்கு ஆடும் அணியில் இடம் கிடைக்குமா என்பது சூழ்நிலையை பொறுத்து முடிவு செய்யப்படும். உள்ளூரில் நடைபெறும் போட்டி என்பதால் ரசிகர்கள் ஆதரவு எங்களுக்கு கிடைக்கும். எனவே சென்னையில் நடைபெறும் நான்கு போட்டிகளையும் வெல்வதற்கு முனைப்பு காட்டுவோம்’,  என்றார்.    

            

தமிழ் தலைவாஸ் அணியின் வீரரான ஷபீர் பாப்பு, ‘தனிப்பட்ட வீரரின் சாதனையை விட அணியின் வெற்றி முக்கியம் என்பதால் பயிற்சியாளர் அறிவுறுத்தலின்படி விளையாடி வருகிறேன். அதனால் தனிப்பட்ட முறையில் புள்ளிகள் எடுக்க அதிக முக்கியத்துவம் கொடுப்பது இல்லை” என்றார்.   அதேபோல் அணியின் முன்னணி வீரரான ராகுல் சவுத்ரி, ‘நான் அதிக புள்ளிகள் எடுக்கிறேனா... அஜய் தாக்கூர் அதிக புள்ளிகள் எடுக்கிறாரா என்பது முக்கியமில்லை. யார் எவ்வளவு புள்ளி எடுத்தாலும் அது அணிக்காக எடுக்கப்பட்ட புள்ளிகள் தான். எப்போதும் அணி வெற்றி பெற வேண்டும் என்பதை இலக்காகக் கொண்டு தான் நாங்கள் விளையாடி வருகிறோம். சில நேரங்களில் அந்த முயற்சி பலனளிக்காமல் போய் விடுகிறது’ என்றார்.

Related Stories: