சாலை, குடிநீர் வசதி செய்து தராததை கண்டித்து முட்டி போட்டு நூதன போராட்டம் : 40 பேர் கைது

திருநின்றவூர்: திருநின்றவூர் பேரூராட்சியில் சாலை, குடிநீர் வசதிகளை செய்து தராத அதிகாரிகளை கண்டித்து, தரையில் முட்டி போட்டு போராட்டம் நடத்திய 40 பேரை போலீசார் கைது செய்தனர். திருநின்றவூர் பேரூராட்சி 13வது வார்டுக்கு உட்பட்ட பெரியார் நகரில் அம்பிகை அம்மன் 1, 2, 3வது தெருக்கள் மற்றும் குறுக்கு தெருக்கள் உள்ளன. மேற்கண்ட தெருக்களில் பல ஆண்டுகளாக சாலைகள் சிதிலமடைந்து குண்டும், குழியுமாக கிடைக்கின்றன. இதனால், சிறு மழை பெய்தால் கூட சாலைகள் சேறும் சகதியுமாக மாறி விடுகிறது. மேற்கண்ட சாலை வழியாக தான் அங்கன்வாடி மையத்திற்கு செல்ல வேண்டும் என்பதால், 20க்கும் மேற்பட்ட குழந்தைகள் சிரமத்துடன் சென்று வருகின்றனர். இந்த மையத்தில் தான் கர்ப்பிணிகளுக்கு தடுப்பூசி, குழந்தைகளுக்கு போலியோ சொட்டு மருந்து, தாய் சேய் நல மருத்துவம் செய்யப்படுவதால், இங்கு வந்து செல்வோர் கடும் அவதிப்படுகின்றனர்.

Advertising
Advertising

மேலும், மேற்கண்ட பகுதியில் 20 நாளுக்கு ஒரு முறை தான் பேரூராட்சி நிர்வாகம் மூலம் குடிநீர் வினியோகம் செய்யப்படுகிறது. இதனால், பொதுமக்கள் தனியார் டிராக்டர் வரும் தண்ணீரை ஒரு குடம் ₹10க்கு வாங்கி பயன்படுத்தும் நிலை உள்ளது. அங்குள்ள அங்கன்வாடி மைய கட்டிடம் கட்டப்பட்டு 20 ஆண்டுகளுக்கு மேலாவதால், முறையான பராமரிப்பின்றி இடிந்து விழும் அபாயத்தில் உள்ளது. இதனால், குழந்தைகளை பெற்றோர்  தினமும் அச்சத்துடன் தான் அனுப்புகின்றனர். இதுகுறித்து பொதுமக்கள் சார்பில் பலமுறை சம்மந்தப்பட்ட அதிகாரிகளுக்கு புகார் அனுப்பியும் இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்காமல் அலட்சியமாக உள்ளனர். இதை கண்டித்து திருநின்றவூர் பகுதி அனைத்திந்திய மாதர் சங்கம் சார்பில் நேற்று காலை 10 மணிக்கு சங்க செயலாளர் பவுர்ணமி தலைமையில் 50க்கும் மேற்பட்ட பெண்கள் திரண்டு, சேதமடைந்த சாலையில் முட்டிப்போட்டு நடந்தபடி போராட்டம் நடத்தினர். தகவலறிந்து வந்த திருநின்றவூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் குணசேகரன் தலைமையிலான போலீசார் போராட்டத்தில் ஈடுபட்ட முன்னாள் கவுன்சிலர் ராபர்ட் எபனேசர் உள்பட 40 பேரை கைது செய்து, திருநின்றவூரில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் அடைத்து, மாலையில் விடுதலை செய்தனர்.

Related Stories: