பல்லாவரம் சுற்று வட்டார பகுதிகளில் போதை பொருட்கள் விற்பனையால் மாணவர்கள், இளைஞர்கள் பாதிப்பு : கண்டுகொள்ளாத காவல்துறை

பல்லாவரம்: பல்லாவரம் சுற்று வட்டாரப் பகுதிகளில் சட்டவிரோத மது விற்பனை, கஞ்சா, குட்கா உள்ளிட்ட போதை பொருட்கள் தடையின்றி விற்பனை செய்யப்படுவதால் மாணவர்கள், இளைஞர்கள் அதிகளவில் போதை பழக்கத்துக்கு அடிமையாகி வருகின்றனர். இதை தடுக்க வேண்டிய போலீசார் கண்டும் காணாமல் இருப்பதாக பொதுமக்கள் குற்றம்சாட்டுகின்றனர். பல்லாவரம் மற்றும் சுற்றுப் பகுதிகளான பம்மல், நாகல்கேணி, அனகாபுத்தூர், பொழிச்சலூர், கீழ்கட்டளை, ஈச்சங்காடு போன்ற பகுதிகளில் அடுக்குமாடி கட்டிட கட்டுமான பணிகள் அதிகளவில் நடைபெற்று வருகின்றன. இவற்றில், வடமாநில தொழிலாளர்கள் நூற்றுக்கணக்கானோர் வேலை செய்து வருகின்றனர். இவர்கள் வசிக்கும் பகுதிகளில் தமிழக அரசால் தடை செய்யப்பட்ட ஹன்ஸ், பான்பராக், மாவா உள்ளிட்ட போதை பொருட்கள் அதிகளவில் விற்பனை செய்யப்படுகிறது. இந்நிலையில், சமீப காலமாக மேற்கண்ட பகுதிகளில் கஞ்சா விற்பனையும் கொடி கட்டி பறக்கிறது.

Advertising
Advertising

கஞ்சா விற்கும் கும்பல், வடமாநில தொழிலாளர்கள் மட்டுமின்றி கல்லூரி மாணவர்கள், இளைஞர்கள் மற்றும் சிறுவர்களுக்கும் கஞ்சா விற்பனை செய்து வருகின்றனர். இதனால், கஞ்சா பழக்கத்துக்கு அடிமையாகும் மாணவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.  

குறிப்பாக, கார் மற்றும் பைக்குகளில் கல்லூரி மாணவர்கள் நேரடியாக கஞ்சா விற்பனை செய்யும் நபர்களை தேடி வந்து வாங்கி செல்வதாகவும் கூறப்படுகிறது. இதுஒருபுறம் இருக்க டாஸ்மாக் பார்களில் நள்ளிரவு முதல் அதிகாலை வரை மது விற்பனை தடையின்றி நடைபெறுகிறது. பார் உரிமையாளர்கள் மாதம்தோறும் ஒரு குறிப்பிட்ட தொகையை போலீசாருக்கு வழங்கி விடுவதால், அவர்கள் இதனை கண்டுகொள்வதில்லை.

இதுகுறித்து பொதுமக்கள் கூறுகையில், ‘‘பல்லாவரம் சுற்று வட்டார பகுதிகளில் போதை பொருட்கள் விற்பனை தடையின்றி நடைபெறுகிறது. குறிப்பாக கஞ்சா உள்ளிட்ட போதை பொருட்களுக்கு மாணவர்கள், இளைஞர்கள் அதிகளவில் பாதிக்கப்படுகின்றனர். பல இடங்களில் போதை பழக்கத்தால் பாதிக்கப்படும் மாணவர்களின் பெற்றோர் இதுபற்றி போலீசில் புகார் அளித்தால், பெயரளவுக்கு ஒரு சிலரை மட்டும் கைது செய்து தங்களது கடமையை முடித்துக் கொள்கின்றனர்.

சில போலீசார், புகார் தெரிவிப்பவரின் விவரங்களை போதை பொருள் விற்பவரிடமே கொடுத்து விடும் சம்பவங்களும் நடக்கிறது. இதனால், புகார் அளிப்பவர்களுக்கு  கொலை மிரட்டல் மற்றும் தாக்குதல் நடத்தப்படுகிறது. இதற்கு பயந்தே பொதுமக்கள், நமக்கு ஏன் வம்பு என்று ஒதுங்கி செல்கின்றனர். போதை பழக்கத்துக்கு அடிமையாகும் இளைஞர்கள் தொடர்ந்து கஞ்சா வாங்குவதற்கு வழிப்பறியில் ஈடுபட்டு வருகின்றனர். இதனால், பம்மல், அனகாபுத்தூர் உள்ளிட்ட பகுதிகளில் வழிப்பறி மற்றும் கொலை போன்ற சம்பவங்கள் அதிகரித்து காணப்படுகிறது. எனவே, இதுகுறித்து போலீஸ் உயர் அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுத்து, சட்டவிரோத போதை பொருட்கள் விற்பனையில் ஈடுபடும் நபர்கள் மீது கடும் நடவடிக்கை எடுத்து, பெருகி வரும் குற்றச் சம்பவங்களை தடுக்க வேண்டும்,’’ என்றனர்.

Related Stories: