லேப்டாப் பை மொத்தமாக வாங்கி தருவதாக கம்பெனி அதிபரிடம் 20 லட்சம் அபேஸ் : சிசிடிவி கேமரா மூலம் மர்ம நபருக்கு வலை

சென்னை: லேப்டாப் பை மொத்தமாக வாங்கி தருவதாக தோல் கம்பெனி அதிபரிடம் நூதன முறையில் 20 லட்சத்தை அபேஸ் செய்த மர்ம நபரை போலீசார் தேடி வருகின்றனர். சென்னை வேப்பேரி நெடுஞ்சாலையை சேர்ந்தவர் இஷ்தாக் அகமது (47). அதே பகுதியில் தோல் கம்பெனி நடத்தி வருகிறார். இவர், தனது தொழிலுக்காக லேப்டாப் பை மொத்தமாக கொள்முதல் செய்ய முடிவு செய்து, சமூக வலைதளங்களில் விளம்பரம் செய்தார். அதை பார்த்த இம்ரான் என்ற இடைத்தரகர், இஷ்தாக் அகமதுவை தொடர்பு கொண்டு, ‘20 லட்சம் ஏற்பாடு செய்யுங்கள், நீங்கள் கேட்ட லேப்டாப் பைகளை மொத்தமாக வாங்கி தருகிறேன்’ என்று கூறியுள்ளார். இஷ்தாக் அகமதுவும் பணத்தை ஏற்பாடு செய்து வைத்திருந்தார். சொன்னப்படி ேநற்று முன்தினம், இஷ்தாக் அகமதுவை பார்க்க இம்ரான் வந்தார். தொழில் தொடர்பான விஷயம் என்பதால் கம்பெனியின் குடோனில் இருவரும் பேசி கொண்டிருந்தனர். அப்போது, ‘பணம் தயாரா’ என்று இம்ரான் கேட்டுள்ளார். அதற்கு அலமாரியில் இருக்கிறது என்று இஷ்தாக் அகமது கூறினார். சிறிது நேரம் கழித்து குடிக்க தண்ணீர் கொடுங்கள் என்று இம்ரான் கேட்டுள்ளார்.

Advertising
Advertising

உடனே அருகில் உள்ள கடைக்கு தண்ணீர் கேன் வாங்கி வர சென்றார். அந்த நேரத்தில், அலமாரியில் துணிப்பையில் வைத்திருந்த 20 லட்சத்தை எடுத்து கொண்டு இம்ரான் நைசாக தப்பினார். சிறிது நேரத்தில் தண்ணீர் பாட்டிலுடன் வந்த இஷ்தாக், இம்ரான் இல்லாததை கண்டு அதிர்ச்சியடைந்தார். உடனே அவரது செல்போனில் தொடர்பு கொண்டபோது, அருகில் உள்ள கடையில் இருக்கிறேன். சிறிது நேரத்தில் வந்து விடுகிறேன் என்று கூறி இணைப்பை துண்டித்துள்ளார். வெகு நேரமாகியும் வராததால் சந்தேகமடைந்த இஷ்தாக், மீண்டும் இம்ரானுக்கு போன் செய்தார். சுவிட்ச் ஆப் செய்யப்பட்டிருந்தது. பின்னர் அதை விட்டுவிட்டு இரவு 9.30 மணிக்கு கம்பெனியை மூடும்போது, அலமாரியில் வைத்திருந்த 20 லட்சத்தை வீட்டிற்கு எடுத்து செல்ல பார்த்தபோது பணம் மாயமாகி இருந்தது. அதிர்ச்சியடைந்த அவர், உடனே குடோனில் பொருத்தப்பட்டுள்ள சிசிடிவி கேமரா பதிவுகளை பார்த்தபோது, அலமாரியில் இருந்த பணத்தை எடுத்துக்கொண்டு இம்ரான், நைசாக ஓடும் காட்சி பதிவாகியிருந்தது. உடனே பெரியமேடு காவல் நிலையத்தில் சிசிடிவி பதிவுடன் புகார் செய்தார். அதன்படி போலீசார் வழக்கு பிதவு செய்து தப்பி ஓடிய இம்ரானை போலீசார் தேடி வருகின்றனர்.

Related Stories: