சிறுமியை காதலித்து கர்ப்பமாக்கிய சிறுவன் போக்சோவில் கைது

ஆவடி: ஆவடி அருகே 17 வயது சிறுமியை காதலித்து கர்ப்பமாக்கிய 15 வயது சிறுவனை போலீசார் போஸ்கோ சட்டத்தில் கைது செய்தனர்.ஆவடி அடுத்த பட்டாபிராம் சத்திரம் பகுதியை சேர்ந்த 15 வயது சிறுவனும், ஆவடி, காமராஜர் நகரை சார்ந்த 17 வயது சிறுமியும் கடந்த ஆண்டு ஆவடி கவரபாளையம் சி.டி.எச் சாலை பகுதியில் நடைபெற்ற பொருட்காட்சியில் வேலைக்கு சென்றபோது பழக்கம் ஏற்பட்டது. இருவரும் ஒருவரை ஒருவர் நெருங்கி பழகியுள்ளனர். இந்த பழக்கம் நாளடைவில் காதலாக மாறியது. அதன்பிறகு இருவரும் பல்வேறு இடங்களுக்கு சென்று தனிமையில் இருந்துள்ளனர். இதுபற்றி அறிந்த சிறுமியின் தாய் இருவரையும் கண்டித்துள்ளார். இதையடுத்து சிறுமி வீட்டிலிருந்து கோபித்துக் கொண்டு, அதே பகுதியில் வசிக்கும் அத்தை வீட்டில் தஞ்சமடைந்துள்ளார்.

Advertising
Advertising

அதன்பிறகும் சிறுமியும், சிறுவனும் தங்களது தொடர்பை துண்டிக்காமல் தொடர்ந்து காதலித்து வந்துள்ளனர். இதற்கிடையில் சிறுமியின் அத்தை வேலைக்கு சென்ற பிறகு, சிறுவனை வீட்டுக்கு அழைத்த சிறுமி, அடிக்கடி உல்லாசமாக இருந்ததாக கூறப்படுகிறது. இதன் விளைவாக சிறுமி, தற்போது 5 மாத கர்ப்பிணியாக உள்ளார். தகவலறிந்த சிறுமியின் தாய் அதிர்ச்சியடைந்துள்ளார். இதுகுறித்து ஆவடி அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் அவர் புகார் செய்தார். இன்ஸ்பெக்டர் ஷோபாராணி தலைமையில் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தினர். பின்னர், போக்சோ சட்டத்தின் கீழ், 15 வயது சிறுவனை நேற்று முன்தினம் இரவு போலீசார் கைது செய்து, திருவள்ளூர் சிறார் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர்.

பின்னர், நீதிபதி உத்தரவின் பேரில் சிறுவன் செங்கல்பட்டு அரசு சீர்திருத்த பள்ளியில் அடைக்கப்பட்டான். போலீசார், சிறுமியை மீட்டு  திருவள்ளூர் குழந்தைகள் நல பாதுகாப்பு மையத்தில் சேர்த்துள்ளார்.

Related Stories: