காஞ்சிபுரத்தில் கடந்த 47 நாட்களாக அத்திவரதர் வைபவத்தை சிறப்பாக நடத்திய அனைத்து துறையினருக்கும் முதல்வர் பாராட்டு

சென்னை: அத்திவரதர் வைபவத்தை மிக சிறப்பாக நடத்த அயராது உழைத்திட்ட அனைத்து  துறையினருக்கும் முதல்வர் எடப்பாடி பாராட்டு தெரிவித்துள்ளார். இதுகுறித்து முதல்வர் எடப்பாடி பழனிசாமி நேற்று வெளியிட்டுள்ள அறிக்கை: காஞ்சிபுரம் தேவராஜ சுவாமி கோயில் அனந்தசரஸ் குளத்தில் இருந்து எழுந்தருளியுள்ள அத்திவரதரின் வைபவம், 1.7.2019 முதல் சீரோடும் சிறப்போடும் நடைபெற்று இன்றுடன் நிறைவடையவுள்ளது. தமிழக அரசு விரிவான பாதுகாப்பு, குடிநீர், மருத்துவ முகாம்கள், போக்குவரத்து, அன்னதானம், கர்ப்பிணி பெண்கள், முதியோர் மற்றும் மாற்றுத் திறனாளிகளுக்கான சிறப்பு வழி தரிசனம், உள்ளிட்ட பல வசதிகளை செய்து கொடுத்ததன் காரணமாக, இந்தியா முழுவதும், வெளிநாடுகளில் இருந்தும் ஒரு கோடிக்கும் மேற்பட்ட பக்தர்கள் அத்திவரதரின் தரிசனம் பெற்றுள்ளனர். இந்து சமய அறநிலைய துறை, வருவாய், காவல், உள்ளாட்சி, தீயணைப்பு, மக்கள் நல்வாழ்வு, பொதுப்பணி, போக்குவரத்து, மின்துறை உள்ளிட்ட அனைத்து அரசு துறையினரும், தேசிய மாணவர் படையினரும், தன்னார்வலர்களும், ஒருங்கிணைந்து மிக சிறப்பாக பணியாற்றியதன் விளைவாக, வருகை தந்த பக்தர்கள் அனைவரும் அத்திவரதரை சிறப்பாக தரிசித்து சென்றனர்.

Advertising
Advertising

குறிப்பாக மாவட்ட நிர்வாகமும், காவல்துறையும், கோயில் ஊழியர்களும், அர்ச்சகர்களும் இரவு பகல் பாராமல் மிகச் சிறப்பாக ஒருங்கிணைந்து செயல்பட்டதன் காரணமாக அத்திவரதர் வைபவம் மிகச் சிறப்பாக நடைபெற்றது. இந்த காலக் கட்டத்தில் இரவு 12 மணி முதல் அதிகாலை 4 மணிக்குள், கண் விழித்து காஞ்சிபுரம் நகரில் தூய்மை பணிகளில் ஈடுபட்ட துப்புரவு பணியாளர்களின் பணி மிகவும் மெச்சத்தக்கது. இவர்கள் மேலும் இரண்டு நாட்கள் தங்கி காஞ்சிபுரம் நகரில் தூய்மை பணிகளை மேற்கொள்வார்கள். காஞ்சிபுரம் நகரில் வசிக்கும் இளைஞர்கள் உள்ளிட்ட பொதுமக்கள் அனைவரும் இந்த 48 நாட்களும், வருகை தந்த பக்தர்களை வரவேற்று உபசரித்தது பாராட்டுக்குரியதாகும். இந்த வைபவ காலத்தில் அன்னதானத்திற்கு நிதியுதவியும், ஆதரவும் வழங்கிய நன்கொடையாளர்கள் அனைவருக்கும் மனமார்ந்த நன்றி. அத்திவரதர் வைபவத்தினை சிறந்த முறையில் மக்களிடம் எடுத்து சென்ற பத்திரிகை மற்றும் ஊடகத் துறையினருக்கும் நன்றி.தன்னலம் பாராமல், இரவும், பகலும் அயராது உழைத்திட்ட அனைத்து துறையினருக்கும் மீண்டும் ஒரு முறை மனமார்ந்த நன்றியினையும், பாராட்டுதல்களையும் தெரிவித்துக் கொள்கிறேன். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

Related Stories: