கொல்கத்தாவில் தாறுமாறாக கார் ஓட்டிய பாஜ எம்.பி ரூபா கங்குலியின் மகன் கைது

கொல்கத்தா: கொல்கத்தாவில் தாறுமாறுாக கார் ஓட்டி சுவற்றில் மோதிய, பாஜ எம்பி ரூபா கங்குலியின் மகன் நேற்று கைது செய்யப்பட்டார். அவரை ஒரு நாள் போலீஸ் காவலில் வைக்க அலிபூர் நீதிமன்றம் உத்தரவிட்டது. மேற்கு வங்கத்தை சேர்ந்த பிரபல நடிகை, பாஜ மாநிலங்களவை எம்பி. ரூபா கங்குலி. இவரது மகன் ஆகாஷ் முகர்ஜி (21). இவர் கொல்கத்தாவில் நேற்று முன்தினம் இரவு காரை தாறுமாறாக ஓட்டிச் சென்றார். தெற்கு கொல்கத்தா கிளப்பின் சுற்றுச்சுவரில் இந்த கார் மோதி நின்றது. இதையடுத்து, போலீசார் ஆகாஷ் முகர்ஜியை கைது செய்து வழக்குபதிவு செய்தனர். இவர் குடிபோதையில் இருந்தாரா என்பதை அறிவதற்காக, அவரிடம் ரத்த மாதிரி எடுக்கப்பட்டு பரிசோதனைக்கு அனுப்பப்பட்டுள்ளது. அவரை அலிபூர் நீதிமன்றத்தில் போலீசார் ஆஜர்படுத்தினர். அவரை ஒரு நாள் போலீஸ் காவலில் வைக்க நீதிமன்றம் உத்தரவிட்டது.  

இது குறித்து டிவிட்டரில் தகவல் வெளியிட்டுள்ள ரூபா கங்குலி, ‘எனது வீடு அருகே, எனது மகன் விபத்தில் சிக்கினான். நான் போலீஸ் உதவியை நாடினேன். நான் எனது மகனை நேசிக்கிறேன். அவனது நலனில் அக்கறை செலுத்துகிறேன். இதில் தயவு செய்து அரசியல் வேண்டாம். சட்டம் தனது கடமையை செய்யும்,’ என கூறியுள்ளார். ‘‘இந்த விபத்தை திரிணாமுல் காங்கிரஸ் அரசியலாக்க முயற்சிக்கிறது,’’ என மேற்கு வங்க பாஜ தலைவர் திலீப் கோஷ் கூறியுள்ளார்.

Related Stories: