வடகொரியா மீண்டும் 2 ஏவுகணை சோதனை : தென்கொரியா குற்றச்சாட்டு

சியோல்: வடகொரியா மீண்டும் இரண்டு ஏவுகணை சோதனையை நடத்தியதாக தென்கொரியா குற்றம்சாட்டி உள்ளது. அமெரிக்காவும், தென்கொரியாவும் இணைந்து கூட்டு ராணுவ பயிற்சியில் ஈடுபட்டுள்ளது. இதன் காரணமாக வடகொரியா கோபம் அடைந்துள்ளது. இதனை தொடர்ந்து தென்கொரியாவுக்கு எச்சரிக்கை விடுக்கும் வகையில், தொடர்ந்து அது ஏவுகணை சோதனைகளை நடத்தி வருகிறது. ‘இந்த சோதனை தென்கொரியாவுக்கு விடுக்கப்படும் எச்சரிக்கை’ எனவும் வடகொரிய அதிபர் கிம் ஜாங் உன் சமீபத்தில் தெரிவித்தார். கடந்த சில வாரங்களில் மட்டும் அவர், 4 முறைக்கு மேல் இந்த சோதனைகளை நடத்தி பீதியை கிளப்பியுள்ளார். இந்நிலையில், வடகொரியா நேற்று மீண்டும் 2 ஏவுகணை சோதனைகளை நடத்தியதாக தென்கொரியா குற்றம்சாட்டியது. இது குறித்து தென்கொரிய ராணுவ அதிகாரிகள் கூறுகையில், ‘காங்வோன் மாகாணத்தில் உள்ள டோங்சன் நகரில் இருந்து ஏவுகணைகள் சோதனை நடத்தப்பட்டன. இவை 230 கிமீ தூரம் சென்று ஜப்பானின் கிழக்கு கடல் பகுதியில் விழுந்தன,’ என்றனர்.

இது குறித்து வடகொரியா வெளியிட்டுள்ள அறிக்கையில், ‘வடகொரியாவுடன் நீண்ட காலமாக அமைதி பேச்சுவார்த்தை நடத்த வேண்டும் என விரும்பியவர். வாஷிங்டன்னுடன் கூட்டு ராணுவ பயிற்சியில் ஈடுபட்டிருக்கிறார். அதே நேரம்,  வடகொரியாவுடன் பேச்சுவார்த்தையை தொடங்க வேண்டும் என்றும் நினைக்கிறார்.  இது போன்ற ஆணவமிக்க நபரை பார்க்க முடியாது,’ என்று கூறப்பட்டுள்ளது. நேற்று முன்தினம் ஜப்பானின் 1910-1945 ஆட்சியில் இருந்து கொரியா விடுவிக்கப்பட்டதை குறிக்கும் ஆண்டு விழாவில் தென்கொரிய அதிபர் மூன் ஜே இன் கூறுகையில், “2045ம் ஆண்டுக்குள் அமைதியையும், ஐக்கியத்தையும் அடைவதற்கான இலக்கை தென்கொரியா நிர்ணயித்துள்ளது,” என்றார். இந்த கருத்தை நிராகரித்துள்ள வடகொரியா,  ‘தென்கொரியாவுடன் பேசுவதற்கு எங்களுக்கு எதுவும் கிடையாது. அவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தும் யோசனையும் இல்லை,’ என்று அறிக்கை வெளியிட்டுள்ளது.

Related Stories: