தெலங்கானாவில் நிதி மோசடி வழக்கில் 300 கோடி மதிப்பு சொத்துகள் முடக்கம் : அமலாக்கத் துறை நடவடிக்கை

புதுடெல்லி: நிதி மோசடி வழக்கில் தெலங்கானாவில் செயல்படும் ஹீரா குரூப் நிறுவனத்தின் ரூ.300 கோடி மதிப்புள்ள சொத்துகளை முடக்கி அமலாக்கத்துறை நடவடிக்கை எடுத்துள்ளது. தெலங்கானாவில் இயங்கி வந்த ஹீரா குழும நிறுவனம், தங்கம் வாங்குவதில் தாங்கள் முதலீடு செய்யும் தொகைக்கு கூடுதலாக 36 சதவீத வட்டி அளிப்பதாக கூறி 1.7 லட்சம் முதலீட்டாளர்களிடம் இருந்து ரூ.3,000 கோடி பணத்தை சுருட்டியது. ‘ஹீரா கோல்டு’ என்ற திட்டத்தில் இந்த மோசடி செய்யப்பட்டது. இது தொடர்பாக, இந்த நிறுவனத்தின் தலைவர்கள் நுவேரா ஷெய்க், மோலி தாமஸ், பிஜூ தாமஸ் ஆகியோர் மீது குற்றம் சாட்டப்பட்டது.

இதையடுத்து, தெலங்கானா போலீசாரின் எப்ஐஆர் அடிப்படையில், அமலாக்கத்துறை வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகிறது. இந்த வழக்கில் அமலாக்கத்துறை அடையாளம் காட்டிய இந்நிறுவனத்துக்கு சொந்தமான 100 சொத்துகளில், 50 சொத்துகள் கடந்த ஜூலை 5ம் தேதி முடக்கப்பட்டது. முன்னதாக, அரசு உத்தரவின்படி 30 சொத்துகள் முடக்கப்பட்டன. இந்நிலையில், பண மோசடி தடுப்பு சட்டத்தின் கீழ் தெலங்கானா, கேரளா, மகாராஷ்டிரா, டெல்லி, ஆந்திரா உள்ளிட்ட மாநிலங்களில் ஹீரா நிறுவனத்துக்கு சொந்தமான ரூ. 277.29 கோடி மதிப்பிலான விவசாய நிலங்கள், வணிக வளாகங்கள், அடுக்குமாடி குடியிருப்புகள் ஆகியவற்றையும் ரூ.22.69 கோடி வங்கி கணக்கையும் முடக்கி இருப்பதாக அமலாக்கத்துறை நேற்று வெளியிட்ட அறிக்கையில் தெரிவித்துள்ளது.

Related Stories: