பிரதமர் மோடியின் சுதந்திர தின உரையில் கூறப்பட்ட 3 முக்கிய அம்சங்களை அனைவரும் வரவேற்க வேண்டும்: ப.சிதம்பரம் டுவிட்

சென்னை: பிரதமர் மோடியின் சுதந்திர தின உரையில் கூறப்பட்ட 3 முக்கியமான அம்சங்களை வரவேற்பதாக ப.சிதம்பரம் தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். நாட்டின் 73-வது சுதந்திர தினம் நாடு முழுவதும் நேற்று கோலாகலமாகவும்,  உற்சாகத்துடனும் கொண்டாடப்பட்டது. டெல்லி செங்கோட்டையில் பிரதமர் மோடி நேற்று தேசியக் கொடியை ஏற்றி மரியாதை செலுத்தினார். பின்னர், நாட்டு மக்களுக்கு ஆற்றிய உரையாற்றிய பிரதமர் மோடி, பல்வேறு அறிவிப்புகளை  வெளியிட்டார். முப்படைகளுக்கும் ஒரே தளபதி விரைவில் நியமிக்கப்படுவதாக அவர் அறிவித்தார். மேலும், நாட்டின் கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்த ரூ.100 லட்சம் கோடி ஒதுக்கீடு செய்யப்படும் என்றும், நாடு முழுவதும் வீடுகளுக்கு ரூ.3.5  லட்சம் கோடி செலவில் பைப் மூலம் குடிநீர் சப்ளை செய்யும் திட்டம் செயல்படுத்தப்படும் என்றும் அறிவித்தார்.

தொடர்ந்து பேசிய பிரதமர் மோடி, மக்கள் தொகை அதிகரிப்பு, வருங்கால தலைமுறைக்கு புதிய சவால்களை ஏற்படுத்தியுள்ளது. இப்பிரச்னைக்கு தீர்வு காண மத்திய, மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்க வேண்டும். ஜனத்தொகை அதிகரிப்பு  என்பது நமது எதிர்கால தலைமுறையினருக்கு பல்வேறு பிரச்சனைகளை ஏற்படுத்தும், சிறிய குடும்பமே தேசபக்தி என்று கூறியிருந்தார். அதே போல, செல்வத்தை உருவாக்குபவர்கள் நாட்டிற்கு பெருமளவு தொண்டாற்றுவதாகவும். செல்வத்தை  உருவாக்குபவர்களை மதிக்க வேண்டும் என்றார்.

மேலும். நாட்டில் இருந்து பிளாஸ்டிக் கழிவுகளை அகற்ற மக்கள் முயற்சி எடுக்க வேண்டும். வரும் அக்டோபர் 2ம் தேதி முதல், ஒரு முறை பயன்படுத்தப்படும் பிளாஸ்டிக் பொருட்களை தவிர்க்க வேண்டும். நமது பல பிரச்னைகளுக்கு  அடிப்படை காரணம், ஒரு முறை பயன்படுத்தப்படும் பிளாஸ்டிக் பொருட்கள். இதற்கான தீர்வு நம்பிடம் இருந்துதான் வர வேண்டும். வீட்டிலோ, ரோட்டிலோ, பிளாஸ்டிக் பொருட்களை பார்த்தால், அதை உங்கள் பகுதியில் உள்ள துப்புரவு  ஊழியர்கள் அகற்ற உதவ வேண்டும். ஒரு முறை பயன்படுத்தும் பிளாஸ்டிக் இல்லா இந்தியாவை நாம் உருவாக்க வேண்டும். பிளாஸ்டிக் சுத்திகரிப்பு வழிமுறைக்கு, தொழிலதிபர்கள், தொழில் நுட்ப வல்லுனர்கள் உதவ வேண்டும் என்றும்  பேசினார்.

இதற்கிடையே, காங்கிரஸ் மூத்த தலைவரும், முன்னாள் மத்திய நிதியமைச்சரான ப.சிதம்பரம் பல்வேறு நிலைகளில் மத்திய பாஜக அரசிற்கு எதிராகவும், பாஜகவை எதிர்த்து பேசி வருகிறார். இந்நிலையில், பிரதமர் மோடியின் சுதந்திர தின  உரையில் கூறப்பட்ட 3 முக்கியமான அம்சங்களை வரவேற்பதாக ப.சிதம்பரம் தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். சிறிய குடும்பமே தேசபக்தி, செல்வத்தை உருவாக்குபவர்களை மதிக்க வேண்டும், ஒரு முறை மட்டுமே பயன்படுத்தி  தூக்கி எறியும் பிளாஸ்டிக்கிற்கு தடை விதிக்க வேண்டும் என்ற அந்த மூன்று அம்சங்களை நாம் அனைவரும் வரவேற்க வேண்டும் என்று சிதம்பரம் குறிப்பிட்டுள்ளார். இந்த மூன்றிலும் கூட ஜனத்தொகையை கட்டுப்படுத்த வேண்டும், ஒரு  முறை பயன்படுத்தப்படும் பிளாஸ்டிக்கை ஒழிக்க வேண்டும் என்ற இரண்டு அறிவிப்புகளை மக்கள் இயக்கமாக மாற்ற வேண்டும். கடைநிலை அளவிற்கு எடுத்துச் சென்று மக்கள் இயக்கமாக மாற்றக்கூடிய நூற்றுக்கணக்கான தனியார்  அமைப்புகளை உள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

Related Stories: