இலங்கையில் நடைபெறும் விழாவிற்கு கொண்டு வரப்பட்ட மெலிந்த யானை: துன்புறுத்தப்படுவதாக நெட்டிசன்கள் காட்டம்!

கொழும்பு: இலங்கையில் நடைபெறும் பெரஹரா விழாவிற்கு கொண்டு வரப்பட்ட மெலிந்த யானையின் புகைப்படம் ஒன்று சமூக வலைத்தளத்தில் வைரலாகி வருகிறது. இலங்கையில் ஆண்டுதோறும் பெரஹரா திருவிழா 10 நாட்கள் கொண்டாடப்படும். அந்த வகையில், இந்த ஆண்டும் பெரஹரா திருவிழா இந்த மாதம் 5ம் தேதி தொடங்கி இன்றுடன் நிறைவு பெறுகிறது. இந்த விழாவில் 50க்கும் அதிகமான யானைகள் பங்கேற்றுள்ளன. மேலும் 2000க்கும் மேற்பட்ட கலைஞர்கள் கலந்து கொண்டுள்ளனர். இந்த திருவிழாவில் கண்டியில் உள்ள புத்தரின் பதிக்கப்பட்ட புனிதப்பல் யானைகள் படைசூழ ஊர்வலமாக கொண்டுச் செல்லப்படும். மின்விளக்குகளால் ஒளிரும் கட்டிடங்கள், இசைக்கு ஏற்ப நடனமாடும் கலைஞர்கள், ஆடி அசைந்து வரும் அலங்கரிக்கப்பட்ட யானைகள் என இலங்கையில் வருடம்தோறும் நடைபெற்று வரும் பாரம்பரியம் மிக்க புத்த சமய திருவிழா தான் பெரஹரா.

alignment=

Advertising
Advertising

இந்த நிலையில் தாய்லாந்தை சேர்ந்த save elephants foundation என்ற அமைப்பு பெரஹரா விழாவில் யானைகள் துப்புறுத்தப்படுவதாக கூறி தன்னுடைய முகநூல் பக்கத்தில் ஒரு பதிவை வெளியிட்டுள்ளது. உலக யானைகள் தினமான ஆகஸ்ட் 13ம் தேதி வெளியிட்ட அந்த பதிவில் டிக்கிரி என்ற உடல் மெலிந்த நிலையில், எலும்பும் தோலுமாக மிகவும் பரிதாபத்திற்குரிய நிலையில் உள்ள பெண் யானை ஒன்றின் புகைப்படத்தையும் சேர்த்து வெளியிட்டது. இது குறித்த முகநூல் பதிவில் அந்த அமைப்பு குறிப்பிட்டுள்ளதாவது, 70 வயது டிக்கிரி என்ற பெண் யானை 10 நாட்கள் நடக்கும் பெரஹரா விழாவில் வலுக்கட்டாயமாக அழைத்துவரப்பட்டு கலந்து கொள்ள வைக்கப்பட்டுள்ளது என்றும் இந்த யானை தினமும் மாலை பல கிலோமீட்டர் நடக்கவும், வலுக்கட்டாயமாக மக்களை ஆசிர்வதிக்கவும் நிர்பந்திக்கப்பட்டுள்ளது என்றும் கூறியுள்ளது.

alignment=

மேலும் யானைகளின் மீது பொருத்தப்பட்டிருக்கும் உடைகளின் மூலமாக அதன் பலவீனமான உடல் நிலை தெரியவில்லை என்றும் அதிக ஒளியால் டிக்கிரி கண்களில் இருந்து வரக்கூடிய கண்ணீர் அது அணிந்திருக்கும் ஆபரணத்தின் மூலமாக மறைக்கப்பட்டுள்ளது என்றும் கூறியுள்ளது. இது மட்டுமில்லாமல் விழா என்ற வகையில் அதனை நடத்துபவர்கள் தங்களுடைய நம்பிக்கைகளை வெளிப்படுத்த எல்லா உரிமைகளும் உள்ளது என்று என்று குறிப்பிட்டுள்ள அமைப்பு, இருப்பினும் மற்றொரு உயிர் பாதிக்கப்படுவதை எப்படி ஏற்றுக்கொள்வது?, உயிரினங்களை பாதிக்கப்பட வைத்து விட்டு இதனை எப்படி ஆசிர்வாதம் என்றோ அல்லது புனிதமானது என்றோ கூற முடியும் என்றும் கேள்வி எழுப்பி உள்ளது. மேலும் இந்த படம் ஏற்றுக்கொள்ளக் கூடியதாக நாம் நினைத்தால் யானைகளுக்கு நம்மால் அமைதியான உலகை கொடுக்க முடியாது.

அன்பு செய்வது, எந்த உயிருக்கும் தீங்கு செய்யாதது, இரக்கம் காட்டுவது இவைகள் தான் புத்த மதத்திற்கான வழி என்றும் கூறியுள்ளது. இது மட்டுமல்லாமல் அதனை நாம் கடைபிடிக்க வேண்டிய நேரம் இது என்று உருக்கமாக கூறியுள்ளது. இந்த விவகாரம் தொடர்பாக இலங்கை பிரதமர் ரணில் விக்கிரமசிங்கே-விடம் அனைவரும் முறையிட வேண்டும் என்று அந்த அமைப்பு கோரிக்கை விடுத்து, இலங்கை பிரதமர் அலுவலகத்தை தொடர்பு கொள்வதற்கான விவரத்தையும் பதிவிட்டுள்ளது. இந்த பதிவை கடந்த சில நாட்களாக பலரும் சமூக வலைத்தளங்களில் பதிவிட்டு விழாவை நடத்துபவர்களுக்கு கண்டனம் தெரிவித்து வருகின்றனர். இந்த நிலையில் டிக்கிரி யானை குறித்து பேசியுள்ள கோயில் செய்தி தொடர்பாளர், நாங்கள் எப்போதும் விலங்குகளை பற்றி அக்கறை கொண்டுள்ளோம் என்றும் டிக்கிரியை மருத்துவர்கள் கவனித்து வருகிறார்கள் என்றும் கூறியுள்ளார்.

Related Stories: