வேலூர் மாவட்டத்தை பிரித்தது வரவேற்கத்தக்கது நாகை மாவட்டத்தை 2ஆக பிரிக்க வேண்டும்: ராமதாஸ் கோரிக்கை

சென்னை: வேலூர் மாவட்டத்தை 3 ஆக பிரித்ததற்கு பாமக நிறுவனர் ராமதாஸ் வரவேற்றுள்ளார். இதேபோல், நாகை மாவட்டத்தையும் 2 ஆக பிரிக்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளார். இதுகுறித்து அவர் நேற்று வெளியிட்ட அறிக்கை: முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி வேலூர் மாவட்டத்தைப் பிரித்து புதிய மாவட்டங்கள் அமைப்பது குறித்த அறிவிப்பை வெளியிட்டுள்ளார். தமிழ்நாட்டில் சென்னை மாவட்டத்திற்கு அடுத்தபடியாக அதிக பரப்பளவும், மக்கள்தொகையும் கொண்ட மாவட்டம் வேலூர்தான்.

Advertising
Advertising

வேலூர் மாவட்டத்தில் 39.36 லட்சம் மக்கள் வசிக்கின்றனர். அம்மாவட்டத்தில் 13 சட்டப்பேரவைத் தொகுதிகள் உள்ளன.மக்கள்தொகை அடிப்படையில் பார்த்தால், உலகின் 101 நாடுகள் வேலூர் மாவட்டத்தை விட சிறியவை ஆகும். வேலூர் மாவட்டத்தை மூன்றாக பிரிக்க வேண்டும் என பாமக பல ஆண்டுகளாக வலியுறுத்தி வந்தது. அவற்றுக்கு இப்போது பயன் கிடைத்திருப்பது மிகுந்த மகிழ்ச்சியளிக்கிறது. இதற்காக தமிழக அரசுக்கு வேலூர் மாவட்ட மக்களின் சார்பில் நன்றிகளை தெரிவித்துக் கொள்கிறேன். தமிழ்நாட்டில் கடந்த 8 மாதங்களில் மட்டும் கள்ளக்குறிச்சி, செங்கல்பட்டு, தென்காசி, திருப்பத்தூர், ராணிப்பேட்டை ஆகிய 5 புதிய மாவட்டங்கள் உருவாக்கப்பட்டுள்ளன. எனினும் இது போதுமானதல்ல.

மாறாக, தமிழகத்தின் நிலப்பரப்பை நிர்வாக ரீதியாக சீரமைப்பதற்கு இது ஒரு நல்லத் தொடக்கமாகும்.நாகை மாவட்டத்தின் நிலப்பரப்பு புதுவை யூனியன் பிரதேசத்திற்குட்பட்ட காரைக்காலின் இருபுறமும் பரந்து கிடக்கிறது. மயிலாடுதுறை, பூம்புகார், சீர்காழி ஆகிய தொகுதிகளைச் சேர்ந்த மக்கள் நாகைக்கு செல்ல காரைக்காலை கடந்து செல்வதில் பல சிரமங்கள் இருப்பதால் நாகை மாவட்டத்தை இரண்டாக பிரித்து, மயிலாடுதுறையை தலைநகராகக் கொண்டு புதிய மாவட்டம் அமைக்க வேண்டும் என்ற அப்பகுதி பொதுமக்களின் கோரிக்கைகளும் தமிழக அரசால் கனிவுடன் பரிசீலிக்கப்பட வேண்டும். தமிழகத்தில் ஒவ்வொரு மாவட்டத்திலும் சராசரியாக 12 லட்சம் பேர் இருக்கும் வகையில் அனைத்து மாவட்டங்களையும் மறுவரையறை செய்வதுதான் சிறந்த நடவடிக்கையாக இருக்கும். தமிழகத்திலும் மக்கள்தொகை அடிப்படையில் மாவட்டங்களைப் பிரிக்க தனி ஆணையத்தை அமைக்க வேண்டும்.இவ்வாறு கூறியுள்ளார்.

Related Stories: