கேரளாவில் பலத்த மழையால் வரத்து குறைந்தது ஏலக்காய் கிலோ ரூ.5,500க்கு விற்பனை

சேலம்: கேரளா, தமிழகத்தில் ஏலக்காய் விளைச்சல் குறைந்ததால், கிலோ ரூ.5,500 ஆக விலை உயர்ந்துள்ளது. கேரளா மாநிலம் இடுக்கி மாவட்டம், தமிழகத்தில் தேனி, கம்பம், போடிமெட்டு உள்ளிட்ட பகுதிகளில் ஏலக்காய் விவசாயம் நடக்கிறது. இந்த பகுதிகளில் பறிக்கப்படும் ஏலக்காயை விவசாயிகள் அறுவடை செய்து இந்தியா முழுவதும் அனுப்பி வருகின்றனர். கடந்தாண்டு கேரளாவில் பெய்த மழையாலும், நடப்பாண்டு பெய்த மழையாலும் அங்கு ஏலக்காய் செடிகள் வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்டன. இதேபோல், தமிழகத்திலும் நடப்பாண்டு ஏலக்காய் விளைச்சல் சரிந்தது. இதன் காரணமாக மார்க்கெட்டுக்கு வழக்கமாக வரும் வரத்தில் இருந்து 30 முதல் 40 சதவீதம் குறைந்துள்ளது. இதனால் வரலாறு காணாத அளவில் விலை உயர்ந்துள்ளது. இந்த விலை உயர்வு வாடிக்கையாளர்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இது குறித்து சேலம் செவ்வாய்பேட்டை மளிகை வியாபாரிகள் கூறியதாவது:

கேரளா மற்றும் தமிழக எல்லையில், 2 ஆண்டாக பெய்த கனமழையால் ஏலக்காய் விளைச்சல் குறைந்துள்ளது. இதன் காரணமாக மார்க்கெட்டுக்கு வழக்கத்தை காட்டிலும் வரத்து சரிந்துள்ளது. கடந்த 5 மாதத்தில் வரலாறு காணாத அளவில் விலை உயர்ந்துள்ளது. கடந்த ஏப்ரலில் ரூ.1,800 முதல் ரூ.2 ஆயிரத்திற்கு விற்ற ஒரு கிலோ ஏலக்காய் படிப்படியாக விலை உயர்ந்து, நடப்பு நிலவரப்படி முதல் ரகம் கிலோ ரூ.5,500 எனவும், இரண்டாம் ரகம் கிலோ ரூ.5 ஆயிரம் வரை விலை உயர்ந்துள்ளது. விலை உயர்வு காரணமாக, ஒரு கிலோ வாங்கிய வாடிக்கையாளர்கள் கால் கிலோ அளவில் வாங்கிச்செல்கின்றனர். பெரும்பாலான ஸ்வீட் கடை, டீக்கடை, பிரியாணி கடைகளிலும் ஏலக்காயை குறைத்துள்ளனர். இவ்வாறு மளிகை வியாபாரிகள் கூறினர்.

Related Stories: