×

தங்கம் விலை அதிரடி உயர்வு ஒரே நாளில் சவரனுக்கு ரூ.320 அதிகரிப்பு

சென்னை: தங்கம் விலை நேற்று அதிரடியாக சவரனுக்கு ரூ.320 அதிகரித்தது. இன்னும் விலை அதிகரிக்க வாய்புள்ளதாக நகை வியாபாரிகள் கூறியுள்ளனர். தங்கம் விலை மீண்டும் அதிகரிக்க தொடங்கியுள்ளது நகை வாங்குவோரை அதிர்ச்சிக்கு உள்ளாக்கியுள்ளது. தங்கம் விலை கடந்த மே மாதம் முதல் உயர்ந்து வருகிறது. சில நாட்களில் அதிகப்படியாக விலை உயர்ந்த போக்கும் காணப்பட்டது. இந்த நிலையில் கடந்த 1ம் தேதி முதல் தங்கம் விலை தொடர்ச்சியாக உயர்ந்து வந்தது. அதாவது, கடந்த 1ம் தேதி ஒரு சவரன் ரூ.26,480, 2ம் தேதி ரூ.27,064, 3ம் தேதி ரூ.27,328, 5ம் தேதி ரூ.27,680, 6ம் தேதி ரூ.27,784, 7ம் தேதி ரூ.28,376, 8ம் தேதி ரூ.28,464, 9ம் தேதி ரூ.28,552, 10ம் தேதி ரூ.28,656, 12ம் தேதி சவரன் ரூ.28,824, 13ம் தேதி ரூ.29,016க்கும் விற்கப்பட்டது. தொடர்ந்து 13 நாட்களாக உயர்ந்து வந்த தங்கம் விலை நேற்று முன்தினம் திடீரென சரிவை சந்தித்தது.

அதாவது, கிராமுக்கு ரூ.49 குறைந்து ஒரு கிராம் ரூ.3,578க்கும், சவரனுக்கு ரூ.392 குறைந்து ஒரு சவரன் ரூ.28,624க்கும் விற்கப்பட்டது. இந்த விலை குறைவு நகை வாங்குவோரை சற்று மகிழ்ச்சியில் ஆழ்த்தியது. இன்னும் விலை குறையும் என்று நகை வியாபாரிகள் கூறி வந்தனர். ஆனால், நேற்று யாரும் எதிர்ப்பார்க்காத வகையில் தங்கம் விலை மீண்டும் அதிகரித்தது. அதாவது, கிராமுக்கு ரூ.49 அதிகரித்து ஒரு கிராம் ரூ.3,618க்கும் சவரனுக்கு ரூ.320 அதிகரித்து ஒரு சவரன் ரூ.28,944க்கும் விற்கப்பட்டது. ஒரு நாள் மட்டும் விலை குறைந்து மறுபடியும் தங்கம் விலை அதே வேகத்தில் அதிகரித்துள்ளது நகை வாங்குவோருக்கு மேலும் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. வரும் மாதங்களில் திருமணம் உள்ளிட்ட அதிக விஷேச தினங்கள் நடைபெறுவது வழக்கம். இந்த நிலையில் தங்கம் விலை உயர்ந்து வருவது நகை வாங்குவோருக்கு கூடுதல் சுமையை ஏற்படுத்தியுள்ளது. அதே நேரத்தில் இன்னும் தங்கம் விலை அதிகரிக்கும் என்று நகை வியாபாரிகள் கூறியுள்ளனர்.

இது குறித்து சென்னை தங்கம், வைரம் வியாபாரிகள் சங்க தலைவர் ஜெயந்திலால் சலானி கூறியதாவது: அமெரிக்காவின் பங்கு சந்தை கடும் வீழ்ச்சியை சந்தித்துள்ளது. இதன் தாக்கம் உலக சந்தையில் எதிரொலித்து தங்கம் விலை உயர்ந்து வருகிறது. இன்னும் தங்கம் விலை உயர தான் வாய்ப்புள்ளது. குறைவதற்கு வாய்ப்பில்லை. இவ்வாறு அவர் கூறினார்.

8 மாதங்களில் ரூ.4,776 உயர்வு:
தங்கம் விலை கடந்த ஜனவரி 1ம் தேதி சவரன் ரூ.24,168க்கு விற்கப்பட்டது. அதன் பிறகு பிப்ரவரி 1ம் தேதி ரூ.25,488, மார்ச் 1ம் தேதி ரூ.25,096, ஏப்ரல் 1ம் தேதி ரூ.24,272, மே 1ம் தேதி ரூ.24,304, ஜூன் 1ம் தேதி ரூ.24,632, ஜூலை 1ம் தேதி ரூ.25,728 என்று படிப்படியாக விலை உயர்ந்தது. நேற்று தங்கம் விலை சவரன் ரூ.28,944க்கு விற்கப்பட்டது. அதாவது கடந்த ஜனவரி முதல் நேற்று வரை சவரனுக்கு ரூ.4,776 அளவுக்கு உயர்ந்துள்ளது.

Tags : Gold price hike, same day, shaving, Rs 320 hike
× RELATED நாடாளுமன்ற ஊழியர்கள் மேலும் 300 பேருக்கு கொரோனா