மக்கள் போராட்டம் வலுப்பதால் ஹாங்காங் எல்லையில் சீன ராணுவம் குவிப்பு: செங்கொடியுடன் அணிவகுப்பு

சென்ஷேன்: குற்றவாளிகள் ஒப்படைப்பு திட்டத்தை எதிர்த்து ஹாங்காங் மக்கள் தொடர்ந்து போராட்டம் நடத்தி வருவதால் ஆத்திரமடைந்து உள்ள சீனா, ஹாங்காங் எல்லையில் ஆயிரக்கணக்கான வீரர்களை ஆயுதங்களுடன் குவித்துள்ளதால் பதற்றம் ஏற்பட்டுள்ளது. பிரிட்டன் கட்டுப்பாட்டில் இருந்த ஹாங்காக், சீனாவிடம் கடந்த 1997ம் ஆண்டு ஒப்படைக்கப்பட்டது. இதையடுத்து, அந்த நாட்டில் தனியாக அரசு இருந்தாலும் சீனாவின் கட்டுப்பாட்டில்தான் செயல்பட்டு வருகிறது. இந்த நிலையில், சீனாவில் சட்ட விரோத செயல்களில் ஈடுபடும் குற்றவாளிகள் ஹாங்காங்கில் தஞ்சமடைந்தால், அவர்களை தங்களிடம் ஒப்படைக்க வேண்டும் என்று சீனா கோரி வருகிறது. இதற்காக, ஹாங்காங் நாடாளுமன்றத்தில் குற்றவாளிகள் ஒப்படைப்பு மசோதா கொண்டு வரப்பட்டது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து, ஹாங்காங்கில் கடந்த 10 வாரங்களாக பொதுமக்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருவதால் பதற்றம் நிலவுகிறது. இந்த போராட்டம் நாளுக்கு நாள் அதிகரித்து வருவதால், சீனா ஆத்திரம் அடைந்துள்ளது.

Advertising
Advertising

இந்நிலையில், ஹாங்காங் எல்லையில் உள்ள சென்ஷேன் நகர விளையாடடு மைதானத்தில் சீனா ராணுவமான மக்கள் பாதுகாப்பு படையினர் நேற்று திடீரென அணிவகுப்பு பேரணி நடத்தினர். அப்போது சிகப்பு கொடியை ஏந்திச் சென்றனர். அங்கு ஆயுதங்களுடன் கூடிய வாகனங்களும் பேரணியில் அணி வகுத்தன. மேலும் மைதானத்துக்கு வெளியேயும் ஏராளமான லாரிகள் மற்றும் வீரர்கள் ஆயுதங்களை ஏந்தியபடி காணப்பட்டனர். இது தொடர்பாக அங்கு வெளியாகும் குளோபல் டைம்ஸ் வெளியிட்டுள்ள செய்தியில் சென்ஷேனில் ராணுவ வீரர்கள் குவிக்கப்பட்டுள்ளது ஹாங்காங் விவகாரத்தில் சீனா தலையிட தயாராகி வருவதன் அறிகுறி’ என குறிப்பிட்டுள்ளது. மற்றொரு நாளிதழான மக்கள் தினசரியும் `சென்ஷேனில் பொது அமைதியை நிலைநாட்டும் வகையில் அந்த நகர நிர்வாகம் விடுத்த கோரிக்கையை ஏற்று ராணுவம் குவிக்கப்பட்டுள்ளதாக’ தெரிவித்துள்ளது. ஹாங்காங் எல்லையில் சீன வீரர்கள் குவிக்கப்பட்டுள்ளதை அமெரிக்க உளவுத்துறையும் உறுதி செய்துள்ளது.

Related Stories: