வளசரவாக்கத்தில் சினிமா தயாரிப்பாளர் வீட்டில் 130 சவரன் கொள்ளை நாடகம்?

சென்னை: வளசரவாக்கம், தேவிகுப்பம் மெயின்ரோடு முதல் தெருவில் வசிப்பவர் தங்கதுரை (57). ஹோமியோபதி டாக்டர். மதுரையில் கிளினிக் மற்றும் மருத்துவமனை நடத்தி வருகிறார். இவரது குடும்பத்தினர் அங்கு வசிப்பதாக  கூறப்படுகிறது. இந்நிலையில் நேற்று முன்தினம் பூட்டியிருந்த தனது வீட்டில் 130 சவரன் கொள்ளை போனதாக வளசரவாக்கம் போலீசில் தங்கதுரை ஒரு புகார் அளித்தார். போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று, பூட்டியிருந்த வீட்டை திறந்து பார்த்தபோது, அங்கு நீண்ட காலமாக ஆட்கள் வசித்ததற்கான எந்த அடையாளமும் தென்படவில்லை. மேலும் வீடு பாழடைந்து கிடந்தது.அக்கம் பக்கத்தினரிடம் விசாரித்தபோது கடந்த 6 மாதங்களுக்கு முன் தங்கதுரை வீட்டை காலி செய்துவிட்டு குடும்பத்தினருடன் மதுரைக்கு சென்றுவிட்டதாக கூறுகின்றனர்.

இதுதவிர தங்கதுரை கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு தனது மகனை வைத்து 250 எனும் திரைப்படம் தயாரித்துள்ளார். அப்படம் தோல்வி அடைந்ததால் கடன் அதிகரித்தது. இதனால் கடன்காரர்களிடமிருந்து தப்பிப்பதற்காக ஏற்கனவே காலி  செய்த வீட்டில் 130 சவரன் நகைகள் கொள்ளைபோனதாக நாடகமாடுகிறாரா? என்ற சந்தேகம் போலீசுக்கு எழுந்துள்ளது. இதையடுத்து அவரது வீட்டு கதவு மற்றும் அறைகளில் மர்ம நபர்களின் கைரேகைகள் பதிவாகியிருக்கிறதா? என சோதித்தனர். புகாரின்பேரில் வளசரவாக்கம் போலீசார் வழக்குப்பதிவு செய்து ஹோமியோபதி டாக்டர் தங்கதுரை உள்ளிட்ட  10க்கும் மேற்பட்டோரிடம் விசாரித்து வருகின்றனர்.

Related Stories: