ஆங்கில வழி மருத்துவர்களில் 57 சதவீதம் பேர் போலி: மத்திய சுகாதாரத்துறை அறிவிப்பு

புதுடெல்லி: ஆங்கில மருத்துவ டாக்டர்களில் 57 சதவீதம் பேர் போலிகள் என்று மத்திய சுகாதாரத்துறை தகவல் தெரிவித்துள்ளது. இந்தியாவில் ஆங்கில மருத்துவ முறையில் சிகிச்சை அளிப்பவர்கள் முறைப்படி படித்திருக்க வேண்டும். மேலும் இந்திய மருத்துவ கவுன்சிலில் அவர்கள் பதிவு செய்து இருக்க வேண்டும் என்று விதிகள் உள்ளன. இதன் அடிப்படையில் இந்திய மருத்துவ கவுன்சிலில் நாடு முழுவதும் 11 லட்சத்து 46 ஆயிரம் பேர் பதிவு செய்து இருக்கிறார்கள். ஆனால் இவ்வாறு முறைப்படி மருத்துவ கல்வியை முடிக்காமல் நாடு முழுவதும் ஏராளமானவர்கள் ஆங்கில மருத்துவ சிகிச்சை அளித்து வருகிறார்கள்.

ஆங்கில மருத்துவ சிகிச்சை அளிப்பவர்களில் 57.3 சதவீதம் பேர் முறைப்படி படிக்காதவர்கள் என்று இந்திய சுகாதாரத்துறை கூறியுள்ளது. பெரும்பாலும் கிராம பகுதிகளில் இதுபோன்ற டாக்டர்கள் தான் ஆங்கில மருத்துவ சிகிச்சை அளித்து வருவதாக குற்றசாட்டு எழுந்துள்ளது. எனவே படித்த டாக்டர்கள் கிடைக்காததால் இந்த போலி டாக்டர்களிடம் நோயாளிகள் செல்கின்றனர்.

உலக சுகாதார நிறுவனம் ஆயிரம் பேருக்கு ஒரு டாக்டர் இருக்க வேண்டும் என்று பரிந்துரை செய்துள்ளது. ஆனால் இந்தியாவில் 1,456 பேருக்கு ஒரு டாக்டர்தான் இருக்கிறார்கள் என்று கருத்து கணிப்பில் தெரியவந்துள்ளது. உரிய டாக்டர்கள் இல்லாததால் போலி டாக்டர்களின் எண்ணிக்கை அதிகமாக இருக்கிறது. இது தொடர்பாக மத்திய சுகாதாரத்துறை அதிகாரி ஒருவர் கூறும் போது, இந்த வி‌ஷயத்தில் அனைத்து முதல்-மந்திரிகளும் கவனம் செலுத்தி உரிய சட்டங்களை உருவாக்க வேண்டும் என கூறியுள்ளார். அனைத்து மக்களுக்கும் தரமான மருத்துவ வசதி கிடைக்க வழிசெய்ய வேண்டும் என்று மத்திய சுகாதாரத்துறை அதிகாரி தெரிவித்துள்ளார்.


Tags : English way, doctor, 57 percent, fake, central health department, notification
× RELATED திருவண்ணாமலையில் தொடர் கருக்கலைப்பு:...