×

அத்திவரதர் வைபவம்: மேலும் 10 நாட்களுக்கு நீட்டிக்க அரசுதான் முடிவு செய்ய வேண்டும்...சென்னை உயர்நீதிமன்றம் கருத்து

காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் வரதராஜ பெருமாள் கோயிலில் அத்திவரதர் வைபவம் கடந்த மாதம் 1-ம் தேதி முதல் பக்தர்களுக்கு அருள் பாலித்து  வருகிறார். முதல் 31 நாட்கள் சயன கோலத்தில் காட்சி தந்த அத்திவரதர். இந்த மாதம் 1-ம் தேதி முதல் நின்ற கோலத்தில் பக்தர்களுக்கு காட்சி  தருகிறார். அத்தி வரதரை தரிசிக்க உலகம் முழுவதும் இருந்து பக்தர்கள் வருகை புரிந்து தரிசித்து செல்கின்றனர். உலகிலேயே அத்திவரதர் மட்டுமே  40 ஆண்டுகளுக்கு ஒருமுறை பக்தர்களுக்கு காட்சி தருவார் என்பதால் பக்தர்கள் தரிசனத்துக்காக லட்சக்கணக்கில் திரண்டு வருகின்றனர்.

குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த், துணை குடியரசுத் தலைவர் வெங்கையா நாயுடு, மத்திய அமைச்சர்கள், முதல்வர் எடப்பாடி பழனிசாமி, துணை  முதல்வர் எடப்பாடி பழனிசாமி, தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோகித், தெலுங்கானா முதல்வர் சந்திரசேகர ராவ் நடிகர் ரஜினிகாந்த் உள்ளிட்டவர்கள்  அத்திவரதரை தரிசனம் செய்துள்ளனர். அரசியல் தலைவர்கள், சினிமா பிரபலங்கள் என பல்வேறு தரப்பினர் அத்திவரதரை தரிசனம் செய்த வண்ணம்  உள்ளனர்.  

இந்நிலையில், நேற்று முன்தினம் செய்தியாளர்களிடம் பேட்டியளித்த காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர் பொன்னையா, வரும் 16-ம் தேதியுடன் அத்திவரதர்  தரிசனம் முடிகிறது என்றும் 17ம் தேதி ஆகம விதிப்படி அத்திவரதர் சிலை குளத்தில் வைக்கப்படும் என்று ஆட்சியர் பொன்னையா தெரிவித்தார்.  வந்தவாசி திருவண்ணாமலையில் இருந்து வரும் பக்தர்கள் டி.ஏ.வி பள்ளி அருகே தங்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாகவும், அத்திவரதரை தரிசிக்க  வரும் பக்தர்களுக்கு காலையில் இருந்தே அன்னதானம் வழங்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாகவும், வெயிலில் பக்தர்கள் நிற்பதை தவிர்க்க  முதலமைச்சர் உத்தரவிட்டுள்ளார் என்று தெரிவித்த மாவட்ட ஆட்சியர், 3000 பக்தர்கள் தங்கும் வகையில் புதிய பந்தல் அமைக்கப்பட்டுள்ளதாக  காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர் பொன்னையா தெரிவித்தார். இன்னும் 2 நாட்களே உள்ள நிலையில் பக்தர்கள் கூட்டம் காஞ்சிபுரத்தில் அலை  மோதுகிறது.

இதற்கிடையே, அத்திவரதர் தரிசனத்தை மேலும் 48 நாட்களுக்கு நீட்டிக்க கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் முறையீடு செய்யப்பட்டது. அத்திவரதர்  வைபவம் முடிய குறைவான நாட்களே உள்ள நிலையில் பக்தர்கள் லட்சக்கணக்கில் வந்து கொண்டிருக்கின்றனர். அத்திவரதரை பலர் இன்னும்  தரிசிக்காத காரணத்தால் உற்சவத்தை மேலும் 10 நாட்களுக்கு நீட்டிக்க கோரி சர்வதேச ஸ்ரீவைஷ்ணவ ராமானுஜ சாம்ராஜ்ய சபா தலைவர் சென்னை  உயர்நீதிமன்றத்தில வழக்கு தொடர்ந்தார்.

இந்த மனு இன்று விசாரணைக்கு வந்தபோது, தரிசனத்தை நீட்டிக்க போவதில்லை என அறநிலையத்துறை அமைச்சர் அறிவித்துள்ளதை சுட்டிக்காட்டி,  அத்திவரதர் தரிசனத்தை மேலும் 48 நாட்களுக்கு நீட்டிக்க முடியாது என்று அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டது. இதனையடுத்து, அத்திவரதர் தரிசனத்தை  நீட்டிக்க முடியாது என்றும் அத்திவரதர் தரிசனத்தை நீட்டிப்பது பற்றி அரசுதான் முடிவு செய்ய வேண்டும் என்றும் சென்னை உயர்நீதிமன்றம்  தெரிவித்துள்ளது.


Tags : The Supreme Court has decided to extend it for a further 10 days.
× RELATED போராடும் பெண்களை ஒடுக்குவதற்காக...