×

எந்த நிபந்தனையும் இன்றி ஜம்மு காஷ்மீர் வர தயாராக இருக்கிறேன்; எப்போது வரலாம்?.. ஆளுநர் சத்யபால் மாலிக்கிற்கு ராகுல்காந்தி கேள்வி

டெல்லி: எந்த நிபந்தனையும் இன்றி ஜம்மு காஷ்மீர் வர தயாராக இருக்கிறேன்; எப்போது வரலாம் என ஆளுநர் சத்யபால் மாலிக்கிற்கு ராகுல்காந்தி கேள்வி எழுப்பியுள்ளார். ஜம்மு காஷ்மீரின் சிறப்பு அந்தஸ்தை கடந்த வாரம் மத்திய அரசு ரத்து செய்ததோடு, இம்மாநிலத்தை 2 யூனியன் பிரதேசங்களாக பிரிக்கும் மறுசீரமைப்பு மசோதாவையும் நாடாளுமன்றத்தில் நிறைவேற்றியது. இந்நிலையில்,  அசம்பாவிதங்களை தடுப்பதற்காக  இம்மாநிலம் முழுவதும் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. ெதாலைத் தொடர்பு, இன்டர்நெட் சேவை துண்டிப்பு உள்ளிட்ட பல்வேறு கட்டுப்பாடுகளும் விதிக்கப்பட்டுள்ளன. இம்மாநிலத்தை பார்வையிட  செல்லும் அரசியல் கட்சி தலைவர்களுக்கு அனுமதி மறுக்கப்பட்டு, திருப்பி அனுப்பப்பட்டு வருகின்றனர்.

இது குறித்து கருத்து கூறிய காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி, ‘காஷ்மீர் மாநிலத்தில் மக்கள் இறந்து கொண்டிருக்கின்றனர். அரசு கூறுவது போல் அங்கு சாதாரண சூழல் நிலவவில்லை,’ என்றார். இதற்கு பதிலளித்த காஷ்மீர்  மாநில கவர்னர் சத்யபால் மாலிக், ‘ஜம்மு காஷ்மீரில் வழக்கமான சூழல்தான் நிலவுகிறது. நீங்கள் வேண்டுமானாலும் ஜம்முவை வந்து பார்வையிட்டு செல்லுங்கள். நான் விமானம் அனுப்புகிறேன்,’ என்று கூறியிருந்தார். இதற்கு, டிவிட்டரில் ராகுல் நேற்று அளித்த பதிலில், ‘அன்புள்ள கவர்னர் மாலிக்..., எதிர்க்கட்சி தலைவர்களின் பிரதிநிதிகள் ஜம்மு காஷ்மீர் மற்றும் லடாக்கை பார்வையிடுவதற்கான உங்களின் அழைப்பை நானும் ஏற்றுக்கொள்கிறேன்.  ஆனால், உங்களின் விமானம் எங்களுக்கு தேவையில்லை. ஆனால், மாநில மக்களையும், ராணுவ வீரர்களையும் நான் சுதந்திரமாக சந்திப்பதற்கான ஏற்பாடுகளை தயவு செய்து உறுதி செய்யுங்கள்,’ என்று கூறியுள்ளார்.

இதற்கு பதிலளித்த ஆளுநர் சத்யபால் மாலிக், ராகுல் காந்தி எதிர்கட்சித் தலைவர்களை அழைத்து வருவேன் என்றெல்லாம் நிபந்தனைகளை விதித்து, காஷ்மீரில் அசாதாரண சூழ்நிலையை ஏற்படுத்தி பிரச்னையை உருவாக்க நினைக்கிறார் என குற்றம் சாட்டியிருந்தார். இந்நிலையில் இதற்கு பதிலளித்த ராகுல் காந்தி தனது டுவிட்டர் பக்கத்தில் இன்று  கூறியிருப்பதாவது:- எனது டுவிட் பதிவுக்கு நீங்கள் அளித்த பதிலை பார்த்தேன். எந்த நிபந்தனையும் இன்றி ஜம்மு காஷ்மீர் வர தயாராக இருக்கிறேன். நான் எப்போது வரட்டும்? என கேள்வி எழுப்பியுள்ளார்.

Tags : Any condition, Jammu and Kashmir, Governor Satyapal Malik, Rahul Gandhi
× RELATED தமிழக கவர்னர் பூஸ்டர் தடுப்பூசி போட்டுக் கொண்டார்