மாநகராட்சி பிடிவாதத்தால் ஜவுளி வியாபாரம் கடும் பாதிப்பு... வெறிச்சோடியது சந்தை

ஈரோடு: ஈரோடு மாநகராட்சி நிர்வாகத்தின் பிடிவாதத்தால் ஜவுளி சந்தையில் வியாபாரம் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளதாக வியாபாரிகள் குற்றம்சாட்டி உள்ளனர். ஈரோடு பன்னீர்செல்வம் பார்க்கில் அப்துல்கனி ஜவுளி மார்க்கெட் செயல்பட்டு வருகிறது. இங்கு நிரந்தர கடைகள், வாரச்சந்தை கடைகள் என 1000க்கும் மேற்பட்ட கடைகள் செயல்பட்டு வருகிறது. இந்நிலையில், மத்திய அரசின் ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின்கீழ் ரூ.51 கோடி செலவில் 50 ஆயிரம் சதுர அடி பரப்பளவில் ஒருங்கிணைந்த ஜவுளி வணிக வளாகம் அமைக்க முடிவு செய்யப்பட்டு இதற்கான பணிகள் கடந்த மாதம் துவங்கியது. தீபாவளி பண்டிகைக்கு பிறகு பணிகளை துவங்க வேண்டும் என்றும், தற்போது கட்டுமான பணிகளுக்காக இடமாற்றம் செய்தால் வியாபாரம் கடுமையாக பாதிக்கப்படும் என்றும் வியாபாரிகள் வலியுறுத்தி வந்தனர். ஆனால், வியாபாரிகளின் கோரிக்கையை ஏற்காமல் அவசர கதியில் மாநகராட்சி நிர்வாகம் பழைய கட்டிடத்தை இடிக்கும் பணியை மேற்கொண்டது. மேலும், தற்போதைய இடத்தில் உள்ள ஜவுளி கடைகளை ஈரோடு நாச்சியப்பா வீதியில் உள்ள சின்ன மார்க்கெட் வளாகத்திற்கு மாற்றியது.

Advertising
Advertising

கடந்த 2 வாரமாக சின்ன மார்க்கெட் வளாகத்தில் ஜவுளி சந்தை நடந்து வருகிறது. கடந்த வாரத்தை போலவே நேற்று நடந்த சந்தையிலும் விற்பனை கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளதாக வியாபாரிகள் தெரிவித்தனர். இடமாற்றம் செய்யப்பட்ட மார்க்கெட்டிற்கு வெளிமாநில, உள்ளூர் சில்லரை வியாபாரிகள் வர தயங்குவதாகவும், மாநகராட்சி நிர்வாகத்தின் தவறான நடவடிக்கையால் வியாபாரிகள் கடுமையாக பாதிக்கப்பட்டு வருவதாக குற்றம் சாட்டி உள்ளனர். இதுகுறித்து வியாபாரிகள் கூறியதாவது: மாநகராட்சி நிர்வாகம் பழைய கட்டிடத்தின் ஒரு பகுதியை கடந்த மாதம் இடித்தது. ஒரு சில நாட்கள் மட்டுமே பணிகள் மேற்கொள்ளப்பட்டது. அதன்பிறகு அப்படியே விட்டுவிட்டது. தற்போது, சின்னமார்க்கெட் வளாகத்தில் பாதி ஜவுளி கடைகளும், ஏற்கனவே இருந்த பகுதியில் பாதி கடைகளும் என தனித்தனியாக செயல்பட்டு வருகிறது. இரு பகுதிகளிலும் வியாபாரம் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. வெளிமாநில, உள்ளூர் சில்லரை வியாபாரிகள் வர தயக்கம் காட்டுகின்றனர். பொதுமக்களும் இரண்டு இடங்களுக்கு சென்று ஜவுளிகளை வாங்க விரும்பவில்லை. இதனால், கடந்த வாரத்தை போலவே நேற்று நடந்த சந்தையிலும் வியாபாரம் முற்றிலும் பாதிக்கப்பட்டது. வியாபாரிகளின் கோரிக்கையை மாநகராட்சி நிர்வாகம் ஏற்றுக்கொள்ளாமல் சர்வாதிகார போக்குடன் நடந்து வருகிறது. இதனால், ஒட்டுமொத்தமாக வியாபாரிகள் பாதிக்கப்பட்டுள்ளனர்.இவ்வாறு வியாபாரிகள் கூறினர்.

Related Stories: