இலங்கை கடற்படை மீண்டும் அட்டகாசம்... ஏழு மீனவர்கள் சிறைபிடிப்பு

ராமேஸ்வரம்: ராமேஸ்வரம் மீனவர்கள் 7 பேரை, படகுடன் இலங்கை கடற்படையினர் சிறை பிடித்து சென்றனர். இலங்கை கடற்படையின் சிறைபிடிப்பு நடவடிக்கை மீனவர்களிடையே கடும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது.

பாக் ஜலசந்தி மற்றும் மன்னார் வளைகுடா கடலில் பலத்த காற்று வீசியதால், கடந்த 2ம் தேதி முதல் ராமேஸ்வரம், பாம்பன் மற்றும் மண்டபம் பகுதிகளை சேர்ந்த விசைப்படகு மீனவர்கள் கடலுக்கு செல்ல தடை விதிக்கப்பட்டது. காற்றின் வேகம் சீரானதால் நேற்று முன்தினம் மீனவர்கள் கடலுக்கு செல்ல அனுமதி வழங்கப்பட்டது.
Advertising
Advertising

இதனால் ராமேஸ்வரத்தில் இருந்து 700க்கும் மேற்பட்ட விசைப்படகுகளில் மீனவர்கள் 10 நாள் இடைவெளிக்குப் பிறகு கடலுக்கு புறப்பட்டனர். இதேபோல் பாம்பன், மண்டபம் பகுதிகளை சேர்ந்த மீனவர்களும் 200க்கும் மேற்பட்ட விசைப்படகுகளில் கடலுக்கு சென்றனர். தங்கச்சிமடத்தை சேர்ந்த சகாயம் என்பவரின் விசைப்படகில் ராமேஸ்வரம் பகுதியை சேர்ந்த கிஸிங்கர், வில்சர், இன்னாசி, நெல்சன் உட்பட 7 மீனவர்கள் இரவில் மீன் பிடித்துக் கொண்டிருந்தனர்.

அப்போது ரோந்து வந்த இலங்கை கடற்படையினர் எல்லைதாண்டி வந்ததாக கூறி, அவர்களை படகுடன் சிறைபிடித்து சென்றனர். தொடர்ந்து மீனவர்கள் 7 பேரையும் கைது செய்து, காங்கேசன் துறைமுகத்திற்கு கொண்டு சென்றனர். அங்கு அவர்களிடம் இலங்கை கடற்படை உயரதிகாரிகள் விசாரணை நடத்தினர். நேற்று மாலை மீனவர்கள் 7 பேரும் ஊர்க்காவல்துறை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர். இலங்கை கடற்படையின் கைது நடவடிக்கையால், 10 நாட்களுக்கு பின்னர் கடலுக்கு சென்ற ராமேஸ்வரம் மீனவர்கள் கடும் வேதனையடைந்தனர்.

மீனவர்கள் சிறைபிடிக்கப்பட்ட சம்பவம் ராமேஸ்வரம் பகுதியில் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது. இதுகுறித்து நேற்று கரை திரும்பிய மீனவர்கள் கூறுகையில், ‘‘10 நாள் இடைவெளிக்கு பிறகு கடலுக்கு செல்வதால் அதிகளவில் மீன்பாடு இருக்கும் என்ற நம்பிக்கையுடன் சென்றோம். ஆனால், மீனவர்கள் 7 பேரை இலங்கை கடற்படை சிறைபிடித்து சென்றதை அறிந்து அதிர்ச்சியடைந்தோம். மற்ற மீனவர்கள் அவசர அவசரமாக கரை திரும்பி விட்டோம். சிறை பிடிக்கப்பட்ட மீனவர்களை உடன் விடுதலை செய்யவும், இருநாட்டு மீனவர்களும் சுமூகமான முறையில் மீன் பிடிக்க தேவையான நடவடிக்கைகளை மத்திய, மாநில அரசுகள் விரைந்து எடுக்க வேண்டும்’’ என்றனர்.

Related Stories: