கிருஷ்ணகிரி அருகே 250 ஆண்டு பழமையான 2 சதிக்கல் கண்டுபிடிப்பு

கிருஷ்ணகிரி: கிருஷ்ணகிரி வரலாற்றையும், பண்டைய கால வாழ்வியலையும் வெளிக் கொணரும் வகையில் அரசு அருங்காட்சியகம் மற்றும் கிருஷ்ணகிரி வரலாற்று ஆய்வு ஆவணப்படுத்தும் குழு பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது. அருங்காட்சியக காப்பாட்சியர் கோவிந்தராஜ், ஆய்வாளர் சுகவனமுருகன், ஆய்வுக்குழு தலைவர் நாராயணமூர்த்தி, வரலாற்று ஆசிரியர் ரவி ஆகியோர் தங்கள் குழுவினருடன் கிருஷ்ணகிரி அருகே உள்ள கல்லுகுறுக்கி ஆத்துக்கால்வாய் பகுதியில் ஆய்வு மேற்கொண்டனர். அப்போது, கல்லுகுறுக்கி கிராமத்தின் அருகே முனியப்பன் கோயில் கால்வாயை ஒட்டிய பகுதியில் உள்ள ராமர் கோயிலின் விளக்குத்தூண் எதிரே ஆஞ்சநேயருக்கு கல்வீடு அமைக்கப்பட்டுள்ளது. இந்த கோயிலுக்கு வலதுபுறம் கோயில் பூசாரிக்கு நடுகல் வீடு ஒன்றும் அமைக்கப்பட்டுள்ளது. அதில் பூசாரி வலக்கையில் மணியும், இடக்கையில் தூபகிண்ணத்தையும் வைத்துள்ளார். இவர் இடக்கை பழக்கம் கொண்டவராக இருக்கக்கூடும். தலையில் ருத்ராட்ச மாலை கட்டியிருக்கிறார். அருகே பூ சேகரிக்கும் கூடையும் உள்ளது. இவர் இறந்தவுடன் இவரின் மனைவி இவருடன் உடன்கட்டை ஏறி இருக்கிறார். எனவே, இது ஒரு சதிக்கல் ஆகும்.

Advertising
Advertising

இதேபோல், ஆத்துக்கால்வாய் பெரிய ஏரிக்கரையில் ரத்னா நகர் அருகே பெருமாள் கோயிலின் வலது புறம் பூசாரிக்காக நடுகல் அமைக்கப்பட்டுள்ளது. அதில் பூசாரி இடக்கையில் மணியை பிடித்து கொண்டும், வலது கையில் தூப கிண்ணத்தையும் வைத்துள்ளார். தலையில் ருத்ராட்ச மாலை கட்டியிருக்கிறார். பூசாரி அருகே காளை ஒன்றும் உள்ளது. பூ சேகரிக்கும் கூடையை கையில் மாட்டிக்கொண்டுள்ளார். இவர் வலக்கை பழக்கம் உள்ளவராக இருக்கலாம். இவர் இறந்த உடன் இவரின் மனைவி உடன்கட்டை ஏறி இருக்கிறார். எனவே, இதுவும் ஒரு சதிக்கல் ஆகும். இவை குறைந்தது 250 ஆண்டுகள் பழமையானதாகும். இந்த 2 நடுகற்களும் பெருமாள் கோயில்களிலே அமைக்கப்பட்டுள்ளது. அந்த விளக்கு தூண்களின் காலமும் 250 ஆண்டுகள் இருக்கலாம். பூசாரிகளுக்கும் நடுகல் அமைக்கப்பட்டு வரும் மரபு அக்காலத்தில் இருந்தது என்பதற்கான ஆதாரமாக இதைக் கருதலாம். காலம் காலமாக தமிழ் மக்களிடம் தொடரும் பண்பாட்டு மரபுகளில் நடுகல் வழிபாடும் ஒன்றாகும். நடுகல் வழிபாடு இனத்தை செழிக்கச் செய்யும் என்ற நம்பிக்கை மக்களிடையே காணப்படுவதாக ஆய்வாலர்கள் தெரிவித்தனர். இந்த ஆய்வுப் பணியில் ஒருங்கிணைப்பாளர் தமிழ்செல்வன், விஜயகுமார், மதிவாணன், கணேசன், பிரகாஷ், காவேரி, ஸ்ரீராமன் உள்ளிட்டோர் ஈடுபட்டனர்.

Related Stories: