கூடலூர், பந்தலூரில் போக்குவரத்து முடக்கம்... தொழிலாளியின் உடலை 6வது நாளாக தேடும் பணி

கூடலூர்: கூடலூர், பந்தலூர் பகுதிகளில் மண் சரிவால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் சீரமைப்பு பணி முடிவடையாததால் போக்குவரத்து தொடர்ந்து முடங்கியுள்ளது. எல்லமலை மண் சரிவில் சிக்கி காணாமல் போன தொழிலாளியின் உடலை 6வது நாளாக தேடி வருகின்றனர்.

Advertising
Advertising

நீலகிரி மாவட்டம் கூடலூர், பந்தலூர் பகுதிகளில் கடந்த ஒரு வாரத்திற்கும் மேலாக பெய்த கனமழை காரணமாக பேரூராட்சிக்குட்பட்ட பல்வேறு பகுதிகள் மண் சரிவால் போக்குவரத்து துண்டிக்கப்பட்டன. எல்லமலை, பெரிய சோலை, சீபுரம், மூலக்காடு, நியூ ஹோப், பார்வுட் உள்ளிட்ட பகுதிகளுக்கு ஒரு வாரத்திற்கு மேல் ஆகியும் பஸ் போக்குவரத்து துவக்கவில்லை. இங்குள்ள பார்வுட், கல்லறை மூலை, எல்ல மலைப்பகுதிகளில் ஏற்பட்ட நிலச்சரிவுகளால் சாலைகள் துண்டிக்கப்பட்டது.

ஆனால் அப்பகுதி இன்னும் முழுமையாக சீரமைக்கப்படாமல் உள்ளன. இதனால் அப்பகுதிகளில் போக்குவரத்து முழுவதுமாக முடங்கியுள்ளது. மேலும் கனமழை காரணமாக கடந்த ஒரு வாரம் விடுமுறை அளிக்கப்பட்ட கூடலூர், பந்தலூர் பகுதிகளில் உள்ள பள்ளி, கல்லூரிகள் இன்று முதல் துவங்கியது. ஆனால் மாணவர்களின் வருகை குறைந்தே இருந்தது.

உடலை தேடும் பணி

இந்நிலையில் எல்லமலையில் ஏற்பட்ட நிலச்சரிவில் சிக்கி செய்னுதீன் என்பவர் காணாமல் போனார். அவரை தேடும் பணி கடந்த 6 நாட்களாக நடந்து வருகிறது. செய்னுதீனின் மனைவி சைபுன்நிஷா நேற்று ஓவேலி காவல் நிலையத்தில், மண் சரிவில் காணாமல்போன தனது கணவரின் உடலை தேடி மீட்டு தருமாறு புகார் அளித்துள்ளார். இதையடுத்து மோப்ப நாய்களை கொண்டு தேடும் பணியில் போலீசார் ஈடுபட்டுள்ளனர்.

Related Stories: