திருப்பத்தூர் பகுதிகளில் போலீசார் ஆதரவுடன் சாராயம் விற்பனை அமோகம்

திருப்பத்தூர்: திருப்பத்தூர் பகுதிகளில் போலீசார் ஆதரவுடன் சாராயம் விற்பனை அமோகமாக நடந்து வருவதாக பொதுமக்கள் குற்றம் சாட்டுகின்றனர். வேலூர் மாவட்டத்தின் கடைக்கோடியில் உள்ள மிகப்பெரிய நகரம் திருப்பத்தூர். இந்த நகரத்தை சுற்றி 300க்கும் மேற்பட்ட கிராமங்களும், 200க்கும் மேற்பட்ட சிறிய கிராமங்களும் உள்ளது. ஜவ்வாது மலை பகுதி எனப்படும் புதூர்நாடு, நெல்லிவாசல் நாடு உள்ளிட்ட பல்வேறு பகுதிகள் உள்ளது. இங்குள்ள மலை கிராம மக்கள் கால்நடை வளர்ப்பு, விவசாயம் உள்ளிட்டவைகளை நம்பி வாழ்ந்து வருகின்றனர். மேலும், இங்கு விலையும் கடுக்காய், சாமை உள்ளிட்ட பொருட்களை மலை கிராம மக்கள் கீழே கொண்டு வந்து, விற்பனை செய்து பிழைப்பு நடத்தி வருகின்றனர். இங்குள்ள அடர்ந்த வனப்பகுதி மற்றும் வீடுகளின் அருகே சில சமூக விரோதிகள் முகாமிட்டு, வீட்டில் கூழ் காய்ச்சுவது போன்று, ஆங்காங்கே அடுப்புகளை வைத்து, சாராயம் காய்ச்சி வாகனங்கள் மூலம் திருப்பத்தூர் மற்றும் சுற்றியுள்ள கிராமங்களுக்கு கொண்டு சென்று விற்பனை செய்து வருகின்றனர்.

மேலும், சாராயம் தயாரிக்க மூலப்பொருளாக பயன்படுத்தும் எரிசாராயத்தை ஆந்திராவில் இருந்து கொண்டு வந்து கோயில் பகுதி மற்றும் வீடுகளில் மறைத்து வைத்து சாராய விற்பனை செய்து வருகின்றனர். போலீசார் மற்றும் ஆளுங்கட்சி முக்கிய பிரமுகர்களின் ஆதரவோடு திருப்பத்தூர் பகுதியில் தாராளமாக சாராயம் விற்பனை நடந்து வருகிறது. இதை தடுப்பதற்காக திருப்பத்தூரில் மதுவிலக்கு அமலாக்கப்பிரிவு என்ற காவல் நிலையம் அமைக்கப்பட்டது. இங்கு பணிபுரியும் பெண் இன்ஸ்பெக்டர் காவல் நிலையம் வராமல், தனது சொந்த ஊரிலேயே வேலைகளை பார்த்து வருகிறாராம். மேலும், அவருக்கு மாதந்தோறும் கணிசமான தொகையும் போய் சேர்ந்து விடுவதாகவும் கூறப்படுகிறது. இதனால், போலீஸ் ஆதரவோடு திருப்பத்தூர் பகுதிகளில் சாராய விற்பனை படுஜோராக நடந்து வருகிறது என பொதுமக்கள் குற்றம் சாட்டுகின்றனர்.

Related Stories: