உபி.யில் 10 பேர் சுட்டுக்கொலை பாதிக்கப்பட்ட குடும்பங்களை சந்தித்து பேசினார் பிரியங்கா

வாரணாசி: உத்தர பிரதேசத்தில் நிலத்தகராறில் சுட்டுக் கொல்லப்பட்ட 10 பழங்குடியின மக்களின் குடும்பங்களை காங்கிரஸ் பொதுச் செயலாளர் பிரியங்கா காந்தி சந்தித்து பேசினார். உத்தரப் பிரதேச மாநிலம், சோன்பத்ரா மாவட்டத்தில் உள்ள உபா கிராமத்தில் நடந்த நிலத்தகராறில் பழங்குடியின மக்கள் 10 பேர் சுட்டுக் கொல்லப்பட்டனர். 28 பேர் காயமடைந்தனர்.  பாதிக்கப்பட்ட குடும்பங்களை சந்திப்பதற்காக அந்த  கிராமத்துக்கு காங்கிரஸ் பொதுச் செயலாளர் பிரியங்கா காந்தி கடந்த 17ம் தேதி சென்றார். அப்போது, மிர்சாபூர் அருகே அவரை போலீசார் தடுத்து நிறுத்தினர்.

அவரை கைது செய்த போலீசார், அன்றிரவு முழுவதும் மண்டபம் ஒன்றில் தங்க வைத்தனர். பின்னர், பாதிக்கப்பட்ட குடும்பத்தினர் அதற்கடுத்த நாள் பிரியங்காவை மண்டபத்துக்கு வந்து சந்தித்தார்கள். அப்போது, அவர்களுக்கு தேவையான  அனைத்து உதவிகளையும் செய்து தருவதாக அவர் உறுதி அளித்தார். இந்நிலையில், சுட்டுக் கொல்லப்பட்ட 10 பழங்குடியினர்களின் குடும்பங்களை பிரியங்கா காந்தி நேற்று சந்தித்தார். முன்னதாக, டெல்லியில் இருந்து வாரணாசி லால்பகதூர் சாஸ்திரி விமான நிலையத்துக்கு ேநற்று காலை வந்த அவர், காங்கிரஸ் தலைவர்கள் மற்றும் தொண்டர்களை சந்தித்து பேசினார். பின்னர், அங்கிருந்து சாலை மார்க்கமாக சோன்பத்ரா  புறப்பட்டு சென்றார்.

Related Stories: