ஜம்மு காஷ்மீரை பார்வையிட வருகிறேன் ஆனால், உங்கள் விமானம் தேவையில்லை: கவர்னர் அழைப்புக்கு ராகுல் பதில்

புதுடெல்லி: ‘கவர்னர் விடுத்த அழைப்பை ஏற்று, காஷ்மீரை பார்வையிட வருகிறோம். ஆனால், நீங்கள் விமானம் அனுப்ப தேவையில்லை,’ என ராகுல் காந்தி  தெரிவித்துள்ளார். ஜம்மு காஷ்மீரின் சிறப்பு அந்தஸ்தை கடந்த வாரம் மத்திய அரசு ரத்து செய்ததோடு, இம்மாநிலத்தை 2 யூனியன் பிரதேசங்களாக பிரிக்கும் மறுசீரமைப்பு மசோதாவையும் நாடாளுமன்றத்தில் நிறைவேற்றியது. இந்நிலையில்,  அசம்பாவிதங்களை தடுப்பதற்காக  இம்மாநிலம் முழுவதும் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. ெதாலைத் தொடர்பு, இன்டர்நெட் சேவை துண்டிப்பு உள்ளிட்ட பல்வேறு கட்டுப்பாடுகளும் விதிக்கப்பட்டுள்ளன. இம்மாநிலத்தை பார்வையிட  செல்லும் அரசியல் கட்சி தலைவர்களுக்கு அனுமதி மறுக்கப்பட்டு, திருப்பி அனுப்பப்பட்டு வருகின்றனர். இது குறித்து கருத்து கூறிய காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி, ‘காஷ்மீர் மாநிலத்தில் மக்கள் இறந்து கொண்டிருக்கின்றனர். அரசு கூறுவது போல் அங்கு சாதாரண சூழல் நிலவவில்லை,’ என்றார். இதற்கு பதிலளித்த காஷ்மீர்  மாநில கவர்னர் சத்யபால் மாலிக், ‘ஜம்மு காஷ்மீரில் வழக்கமான சூழல்தான் நிலவுகிறது. நீங்கள் வேண்டுமானாலும் ஜம்முவை வந்து பார்வையிட்டு செல்லுங்கள். நான் விமானம் அனுப்புகிறேன்,’ என்று கூறியிருந்தார்.

இதற்கு, டிவிட்டரில் ராகுல் நேற்று அளித்த பதிலில், ‘அன்புள்ள கவர்னர் மாலிக்..., எதிர்க்கட்சி தலைவர்களின் பிரதிநிதிகள் ஜம்மு காஷ்மீர் மற்றும் லடாக்கை பார்வையிடுவதற்கான உங்களின் அழைப்பை நானும் ஏற்றுக் ெகாள்கிறேன்.  ஆனால், உங்களின் விமானம் எங்களுக்கு தேவையில்லை. ஆனால், மாநில மக்களையும், ராணுவ வீரர்களையும் நான் சுதந்திரமாக சந்திப்பதற்கான ஏற்பாடுகளை தயவு செய்து உறுதி செய்யுங்கள்,’ என்று கூறியுள்ளார். இதனிடையே  சுதந்திரதினத்தன்று ஜம்மு காஷ்மீரின் நகரில் உள்ள லால்சவுக்  பகுதியில் மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா தேசியக்கொடி ஏற்றவுள்ளதாக தகவல் வௌியாகி உள்ளது. எனினும் அங்குள்ள காவல்துறை இந்த தகவலை உறுதி  செய்யவில்லை. காஷ்மீர் விவகாரத்தில் இந்தியா-பாகிஸ்தான் இடையே பதற்றமான சூழல் நிலவுவதால் பாதுகாப்பு கருதி, அமித் ஷாவின் பயணம் முன்கூட்டியே தெரிவிக்கப்படவில்லை என்றும் பாதுகாப்பு படை வட்டார தகவல்கள்  தெரிவிக்கின்றன.

கட்டுப்பாடுகளை தளர்த்த உச்சநீதிமன்றம் மறுப்பு

ஜம்மு காஷ்மீரில் சிறப்பு அந்தஸ்து ரத்து செய்யப்பட்டதை அடுத்து அங்கு விதிக்கப்பட்ட கட்டுப்பாடுகள் அனைத்தையும் உடனடியாக விலக்க உத்தரவிட வேண்டும் என காங்கிரஸ் கட்சியை சேர்ந்த சமூக ஆர்வலர் டெக்சீன் பூனவல்லா  உச்சநீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்தார். இந்த மனு, நீதிபதி அருண் மிஸ்ரா தலைமையில் நீதிபதிகள் எம்ஆர் ஷா மற்றும் அஜய் ரஸ்தோகி ஆகியோர் அடங்கிய அமர்வு முன் நேற்று விசாரணைக்கு வந்தது. மனுவை விசாரித்த நீதிபதிகள்  அமர்வு, “தற்போது ஜம்மு மற்றும் காஷ்மீர் மிகவும் பதற்றமான சூழ்நிலையில் உள்ளது. இது இயல்பு நிலைக்கு திரும்புவதற்கு அவகாசம் தேவை. அங்கு விதிக்கப்பட்ட கட்டுப்பாடுகளை திரும்ப பெறுவதற்கு மத்திய அரசு மற்றும் காஷ்மீர்  அரசுக்கு உடனடியாக உத்தரவிட முடியாது. இரண்டு வாரங்களுக்கு பின்னர் இது குறித்து விசாரிக்கப்படும்” என்று உத்தரவிட்டனர்.இதேபோல், காஷ்மீர் மாநிலத்தில் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக ஊடகங்களுக்கு விதிக்கப்பட்ட கட்டுப்பாட்டை நீக்கக் கோரும் மனுவை பதிவாளரிடம் தாக்கல் செய்ய நீதிபதிகள் உத்தரவிட்டனர்.

Related Stories: