வழக்கை விரைந்து விசாரிக்க கர்நாடக எம்எல்ஏ.க்கள் மனு: உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் பதிவாளரிடம் தர உத்தரவு

பெங்களூரு: எங்கள் வழக்கை விரைந்து விசாரணை நடத்த வேண்டும் என்று காங்கிரஸ்-மஜத தகுதி நீக்க எம்எல்ஏக்கள் உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளனர்.கர்நாடக மாநிலத்தில் மஜத-காங்கிரஸ் கூட்டணி கட்சியை சேர்ந்த 17 எம்எல்ஏக்கள் நம்பிக்கை வாக்கெடுப்பில் பங்கேற்காமல் புறக்கணித்ததால் குமாரசாமி ஆட்சி கவிழ்ந்தது. இதையடுத்து சபாநாயகர் கே.ஆர். ரமேஷ்குமார் 17 எம்எல்ஏக்களை  தகுதி நீக்கம் செய்து உத்தரவிட்டார். பின்னர் பாஜ சார்பில் முதல்வராக எடியூரப்பா பதவியேற்று பேரவையில் தனது பெரும்பான்மையை நிரூபித்தார். இதையடுத்து சபாநாயகர் பதவியில் இருந்து ரமேஷ்குமார் விலகிக்கொண்டார்.இந்நிலையில், தங்கள் மீதான தகுதி நீக்க நடவடிக்கை சட்டவிரோதமானது என்று கூறி, சபாநாயகர் ரமேஷ்குமாரின் நடவடிக்கையை ரத்து செய்ய கோரி 17 அதிருப்தி எம்எல்ஏக்கள் உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளனர்.

ஆனால், இவர்களது மனு இதுவரை விசாரணைக்கு ஏற்கப்படவில்லை.இதனால் அதிருப்தி எம்எல்ஏக்கள் சார்பில் நேற்று உச்சநீதிமன்றத்தில் கோரிக்கை மனு தாக்கல் செய்யப்பட்டது. அதில், தங்களது வழக்கை விரைந்து விசாரணைக்கு ஏற்க  வேண்டும் என்று குறிப்பிடப்பட்டுள்ளது.இம்மனுவை விசாரித்த நீதிபதிகள் அருண் மிஸ்ரா தலைமையிலான அமர்வு, அதிருப்தி எம்எல்ஏக்கள் தங்கள் கோரிக்கை மனுவை பதிவாளரிடம் ஒப்படைக்க வேண்டும் என்று தெரிவித்தது.தகுதி நீக்க எம்எல்ஏக்கள் சார்பில் ஆஜரான வக்கீல் முகுல் ரோத்தகி வாதிடுகையில், தகுதி நீக்க எம்எல்ஏக்களின் வழக்கை ஆகஸ்ட் 17க்கு விசாரணைக்கு வரும்படி பட்டியலிட வேண்டும் . கட்சி தலைவர்களிடம் கடிதம் பெற்றுக்கொண்டு  அவர்கள் உத்தரவின் பேரில் சபாநாயகர் இந்த துரித முடிவை எடுத்துள்ளதால், எம்எல்ஏக்களின் தகுதி நீக்கம் செல்லாது என்று தெரிவித்தார்.விசாரணையை விரைந்து பட்டியலிட வேண்டும் என்ற மனுவை பதிவாளரிடம் ஒப்படைக்குமாறு முகுல் ரோத்தகியிடம் நீதிபதிகள் தெரிவித்தனர்.

Related Stories: