தயாராகும் அனந்த சரஸ் குளம் 17ம் தேதி மீண்டும் தண்ணீருக்குள் அத்திவரதர்

சென்னை: காஞ்சிபுரம் வரதராஜ பெருமாள் கோயிலில் உள்ள அனந்த சரஸ் குளத்தில் நீருக்கடியில் மீண்டும் வரும் 17ம் தேதி அத்திவரதர் வாசம் செய்ய உள்ளார். இதற்காக குளம் சுத்தம் செய்யும் பணிகள் நடந்து வருகின்றன.அத்திவரதர் வைபவம் கடந்த ஜூலை 1ம் தேதி தொடங்கி நடைபெற்று வருகிறது. கடந்த 31ம் தேதி வரை, சயன கோலத்தில் பக்தர்களுக்கு அருள்பாலித்த அத்திவரதர், ஆகஸ்ட் 1ம் தேதி முதல் நின்ற கோலத்தில் காட்சியளிக்கிறார்.லட்சக்கணக்கான பக்தர்கள் அத்திவரதரை தரிசனம் செய்து சென்றுள்ளனர். இன்னும் 3 நாட்கள் மட்டுமே உள்ள நிலையில் பக்தர்கள் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. அத்திவரதர் வைபவம் முடியும்போது பக்தர்களின் எண்ணிக்கை சுமார் 1  கோடியை தொடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இந்நிலையில் அத்திவரதர் சிலை வைக்கப்படும் அனந்தசரஸ் குளம் தனியார் நிறுவனத்தால் தயார் செய்யப்பட்டு வருகிறது. முன்னதாக கடந்த ஜூன் மாதம் இறுதியில் தனியார் நிறுவனம்  சார்பில் ராட்சத குழாய்கள் மூலம் குளத்தில் உள்ள தண்ணீர் அகற்றப்பட்டு, அருகில் உள்ள பொற்றாமரை குளத்தில் இறைக்கப்பட்டது. குளத்தில் உள்ள பிளாஸ்டிக் கழிவுகள் அகற்றப்பட்டு, குளம் சுத்தம் செய்யப்பட்டது.  மேலும் அத்திவரதர் வைக்கப்படும் மண்டபத்துக்கு செல்லும் வழி சீரமைக்கப்பட்டு, அத்திவரதர் மீண்டும் எழுந்தருள குளம் தயார் செய்யப்பட்டு வருகிறது. இதனை படம் எடுக்க சென்ற செய்தியாளர்களை, தனியார் நிறுவன ஊழியர்கள் அனுமதி  மறுத்து வெளியேற்றினர். அதையும் சிலர், படம் எடுத்து சமூக வலைதளங்களில் பரப்பி வருகின்றனர்.

Tags : Ananta Saras, Pond,figurines,water
× RELATED வைகையில் தண்ணீர் ஓடிய போதும் வறண்டு கிடக்கும் வண்டியூர் தெப்பக்குளம்