×

அரிசி, சர்க்கரை என பாக்கெட்டுகளில் அடைக்கப்படும் பிராண்டட் பொருட்களுக்கு ஜிஎஸ்டி வரி விலக்களிக்க வேண்டும்: விக்கிரமராஜா பேட்டி

சென்னை: தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பு அவசர ஆலோசனை கூட்டம் சென்னை தி.நகரில் நேற்று நடந்தது. கூட்டத்துக்கு பேரமைப்பின் தலைவர் ஏ.எம்.விக்கிரமராஜா தலைமை தாங்கினார். பொதுச்செயலாளர்  ஏ.எம்.சதக்கத்துல்லா, சென்னை மண்டல தலைவர் கே.ஜோதிலிங்கம், கூடுதல் செயலாளர் வி.பி.மணி, செய்தி தொடர்பாளர் பி.பாண்டியராஜன் உள்ளிட்ட மாநில, மாவட்ட நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.கூட்டத்தை தொடர்ந்து “மெரினா ஆப்” அறிமுகம் செய்யப்பட்டது. இந்த செயலியை, ஏ.எம்.விக்கிரமராஜா வெளியிட்டார். இதில் செயலியின் நிர்வாக இயக்குனர் சி.கிருஷ்ணகுமார் உள்பட பலர் கலந்து கொண்டனர். தொடர்ந்து ஏ.எம்.விக்கிரமராஜா அளித்த பேட்டி: சிறுவணிகர்கள் பயனடையும் வகையில் வளர்ந்து வரும் தொழில்நுட்ப முறைகளுக்கு ஏற்ப வணிகர்களை மாற்றங்களுக்கு உட்படுத்தி, வணிகத்தில் வளர்ச்சி பெறும் வகையில் இந்த ஆப் தொடங்கப்பட்டுள்ளது. பொதுமக்கள் பயன்பெறவும்,  அந்நிய வெளிநாட்டு கம்பெனிகளால் ஏற்படும் சிறு, குறு தொழில் பாதிப்புகளை தடுத்து நிறுத்தவும், உள்நாட்டு சந்தை பொருட்களை மேம்படுத்தவும் முடியும். இந்த ஆப் மூலம் 4 கி.மீ. சுற்றளவில் உள்ள மளிகை கடைகளில் இருந்து பலசரக்கு  வாங்கி கொள்ளலாம்.

இந்த ஆப்பில் கடைக்காரர்களின் பெயர், செல்போன் உள்ளிட்ட விவரங்களுடன் புகைப்படங்களும் இணைக்கப்பட்டிருக்கும். எனவே வழக்கமான கடைகளிலேயே, அதுவும் வீட்டில் இருந்தபடியே பொருட்களை வாங்கிடலாம்.  உணவுகளையும் ஆர்டர் செய்யும் வசதியும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. வெளியூர்களில் இருந்தும் தங்கள் உறவினர்களுக்கு பலசரக்கு பொருட்களை வீடுகளுக்கு வாங்கி கொடுக்கலாம்.மத்திய அரசின் ஜி.எஸ்.டி. கவுன்சில் கூட்டம் 36 முறை கூடியுள்ளது. அதில் 94 திருத்தங்கள் மேற்ெகாள்ளப்பட்டுள்ளது. இருப்பினும் முன்னேற்றம் இல்லாத காரணத்தால் மென்மேலும் வணிகர்களுக்கு சரக்கு மற்றும் சேவை வரி சட்ட  விதிகளின்படி அதீத அபராதங்களும், சிறை தண்டனைகளும் நீக்குவது குறித்து அரசு மறு ஆய்வு செய்ய வேண்டும். மேலும் அரிசி, சர்க்கரை என பாக்கெட்டுகளில் அடைக்கப்படும் பிராண்டட் பொருட்களுக்கு 5 சதவீத ஜி.எஸ்.டி.வரியை விலக்க  வேண்டும் என்று மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமனை நேரில் சந்தித்து வலியுறுத்த உள்ளோம்.


Tags : sugar, branded ,products, GST tax ,Wickremarajah
× RELATED தன்னிச்சையாக சம்பள உயர்வு அறிவிப்பதா?...