201 பேருக்கு கலைமாமணி விருது: முதல்வர் எடப்பாடி வழங்கினார்

சென்னை: 2011 முதல் 2018 வரை 8 ஆண்டுகளுக்கான கலைமாமணி  விருது வழங்கும் விழா சென்னை கலைவாணர் அரங்கில் நேற்று நடந்தது. விழாவுக்கு சட்டசபை சபாநாயகர் தனபால் தலைமை தாங்கினார். தலைமை செயலாளர்  சண்முகம் வரவேற்றார். இயல் இசை நாடக மன்றத் தலைவர் இசை அமைப்பாளர் தேவா, தமிழ் பண்பாடு மற்றும் தொல்லியல்துறை அமைச்சர் மாபா.பாண்டியராஜன் ஆகியோர் வாழ்த்தி பேசினார்கள்.விழாவில் 201 பேருக்கு கலைமாமணி விருதுகளை முதல்வர் எடப்பாடி பழனிசாமி வழங்கி பேசினார். அப்போது, கலைமாமணி விருதுடன் வழங்கப்படும் பதக்கம் 3 சவரனிலிருந்து 5 சவரனாக உயர்த்தப்படுகிறது. முன்னாள் முதல்வர்  ஜெயலலிதா பெயரில் சிறப்பு கலைமாமணி விருது வழங்கப்படும்.

நலிந்த கலைஞர்களுக்கான ஊக்கத் தொகை 2 ஆயிரத்திலிருந்து 3 ஆயிரமாக உயர்த்தப்படும் என்ற அறிவிப்புகளை வெளியிட்டார். விழாவில் திரைப்பட நடிகர்கள் கார்த்தி,  பிரசன்னா, சசிகுமார், விஜய் ஆண்டனி, பாண்டியராஜன், சரவணன், பொன்வண்ணன், எம்.எஸ்.பாஸ்கர், தம்பி ராமையா, சூரி, பாண்டு, காந்த், டி.பி.கஜேந்திரன், நடிகைகள் வைஜயந்தி மாலா, சாரதா, ராஜ, காஞ்சனா, இசை அமைப்பாளர்  யுவன் சங்கர் ராஜா உள்பட பலர் கலைமாமணி விருது பெற்றனர்.

விழா துளிகள்
* விருது வழங்கும் விழாவில் ஒரு சில அமைச்சர்கள் தவிர மற்ற அனைவரும் கலந்து கொண்டனர்.
* நீண்ட உரையாற்றிய சபாநாயர் தனபால் தன் பேச்சை முடிக்க கோரி பார்வையாளர்கள் அடிக்கடி கைதட்டினார்கள்.
* விருது பெறுகிறவர்களுக்கு தங்க நிறத்தில் பொன்னாடை வழங்கப்பட்டது. அதனை அவர்களே போர்த்திக் கொண்டு விருது வாங்க நீண்ட வரிசையில் காத்திருந்தனர்.
* மேடை ஏறி விருது வாங்க முடியாதவர்களுக்கு முதல்வர் கீழே இறங்கி வந்து அவர்கள் இருக்கும் இடத்திற்கு சென்று விருது வழங்கினார்.
* விழா தொடங்கும் முன் மேடையில் அலங்கரித்து வைக்கப்பட்டிருந்த ஜெயலலிதாதாவின் படத்துக்கு அமைச்சர்கள் மலர்தூவி அஞ்சலி செலுத்தினார்கள்.
* அமைச்சர் பாண்டியராஜன் பாடல் பாடி பேச்சை தொடங்கினார்.
* விருது அறிவிக்கப்பட்டிருந்த நடிகர்கள் விஜய்சேதுபதி, பிரபுதேவா, சந்தானம், நடிகைகள் பிரியாமணி, பாடலாசிரியர் யுகபாரதி உள்பட பலர் நேற்றைய விழாவிற்கு வரவில்லை.

× RELATED 201 கலைஞர்களுக்கு கலைமாமணி விருது...