ஜெயலலிதா வாழ்ந்து மறைந்த வேதா நிலையத்தை அரசு நினைவு இல்லமாக மாற்றுவது பொருத்தமான நடவடிக்கை: தமிழக அரசிடம் சென்னை கலெக்டர் அறிக்கை தாக்கல்

சென்னை: “ஜெயலலிதா வாழ்ந்து மறைந்த வேதா நிலையத்தை அரசு நினைவு இல்லமாக மாற்றுவது பொருத்தமான நடவடிக்கை” என்று தமிழக அரசிடம் சென்னை கலெக்டர் அறிக்கை தாக்கல் செய்துள்ளார்.மறைந்த தமிழக முதல்வர் ஜெயலலிதாவின் வாழ்நாள் சாதனைகளை விளக்கும் வகையில் அவர் வாழ்ந்து மறைந்த இல்லமான போயஸ் தோட்டத்தில் உள்ள வேதா இல்லத்தினை நில எடுப்பு செய்து அதனை அரசு நினைவு இல்லமாக  மாற்றுவதற்கு தமிழக அரசு கொள்கை ரீதியான முடிவு எடுத்தது. தொடர்ந்து சென்னை மாவட்ட ஆட்சித்தலைவரை இந்நில எடுப்பிற்கான உரிய அலுவலராக தமிழக அரசு நியமித்தது. தொடர்ந்து சமூகத் தாக்க மதிப்பீட்டுக்குழு கடந்த டிசம்பர்  5ம் தேதி போயஸ் கார்டனில் குடியிருப்பவர்களுடனும், டிசம்பர் 8ம் தேதி மற்றும் 11ம் தேதி அப்பகுதி பொது மக்களிடமும் கலந்துரையாடல் நடத்தப்பட்டது. தொடர்ந்து சென்னை மாவட்ட ஆட்சியரால் பொது மக்கள் கருத்து கேட்பு கூட்டம்  நடத்தப்பட்டது. தொடர்ந்து சமூகத்தாக்க மதிப்பீடு இறுதி அறிக்கை, நிபுணர் குழுவின் பரிந்துரைகள் மற்றும் நில எடுப்பு அலுவலரின் அறிக்கை ஆகியவற்றை பரிசீலித்து மாவட்ட ஆட்சியர் தமிழக அரசிடம் அறிக்கை அளித்துள்ளார். அந்த  அறிக்கையில் கூறியிருப்பதாவது: உடல்நலக்குறைவால் சென்னை அப்ேபாலோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட இவர் 2016ம் ஆண்டு டிசம்பர் மாதம் 5ம் தேதி மறைந்தார். அவர் வாழ்ந்த வேதா நிலையத்தினை நில எடுப்பு செய்வது  என்பது முழுக்க முழுக்க நியாயமான காரணங்களின் அடிப்படையிலும், பொது நலன் அடிப்படையிலும் எடுக்கப்பட்ட ஒரு முடிவாகும். இந்த நில எடுப்பினால் ஏற்படும் பயன்கள் இதனால் ஏற்படக்கூடிய சமூகத் தாக்கம் மற்றும் பாதகமான  விளைவுகளைக் காட்டிலும் சிறந்தவை. சமூகத் தாக்க மதிப்பீடு குறித்து ஆய்வு செய்ம் முகமையும் நிபுணர் குழுவும் இந்த நில எடுப்பினால் பாதகமான நிகழ்வுகள் எதுவும் ஏற்படப் போவது இல்லை எனவும் தெரிவித்துள்ளனர்.

இந்த நில எடுப்புக்குள்ளாகும் நிலம் வீட்டிற்கான உத்தேசமான தொகை ரூ.32,09,33,827 ஆகும் இதில் நிலத்திற்கான மதிப்பு ரூ.29,33,23,320 போக எஞ்சியுள்ள மதிப்பு ரூ.2,76,10,507 கட்டிடத்திற்கான மதிப்பாகும். இந்த நில எடுப்புக்கு தேவைப்படும் பூர்வாங்கத் தொகை மேற்கூறிய ரூ.32,09,33,827 ஆகும். இந்த திட்டத்தினால் ஏற்படும் பலன்களும் பொது நலனும் இந்த திட்டத்திற்கான செலவினை நோக்கும் போது பொருத்தமான தொகையே ஆகும். நில எடுப்புக்குள்ளாகும் 10 கிரவுண்டு 322 சதுர அடி நிலம் இந்த திட்டத்தை செயல்படுத்துவதற்கான மிகவும் குறைந்த நிலப்பரப்பாகும். பெருநகர சென்னை மாநகராட்சி பகுதியில் உபரி நிலங்கள் இருப்பினும் அந்தப்பகுதிகளில் நினைவு இல்லம் ஏற்படுத்துவது என்பது பொது மக்களின் உணர்வுகளுக்கு எதிரானதாக அமையும்.
எனவே மயிலாப்பூர் -1 கிராமம், பிளாக் எண் 31, டி.எஸ் எண். 1567/50-ல் உள்ள 10 கிரவுண்டு 322 சதுர அடி நிலம் இந்த திட்டத்தை செயல்படுத்துவதற்கான மிகவும் குறைந்த நிலப்பரப்பாகும். இந்த நில எடுப்பினால் பாதிப்புக்குள்ளாகும்  குடும்பங்கள் எதுவும் இல்லை. எனவே, அவர்களை அப்புறப்படுத்துவதோ, மறு குடியமர்த்துவதோ மறுவாழ்வுக்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளவோ எந்த அவசியமும் ஏற்படவில்லை. இந்த நிலஎடுப்பு பரப்புக்குள்ளாகும் பகுதி  முடக்கப்பட்டுள்ளது குறித்து வருமான வரித்துறை நீதிமன்றத்தில் உறுதி ஆவணம் தாக்கல் செய்துள்ளது. மேலும், மறைந்த முதல்வரின் வாரிசுதாரர்களாக தங்களை அறிவிக்கவேண்டும் என தீபா மற்றும் தீபக் ஆகிய இருவர் தொடர்ந்த வழக்கு  நிலுவையில் உள்ளது. எனவே, நில எடுப்புக்கான இழப்பீட்டு தொகை மேற்படி வழக்குகளை கருத்தில் கொண்டு நீதிமன்றத்தில் செலுத்தப்பட்டுவிடும்.

இந்த நில எடுப்பு நடவடிக்கைக்கு உள்ளாகும் பகுதி வேதா நிலையம் மட்டுமே என்பதனால் போயஸ் கார்டனில் உள்ள இதர பகுதிகளுக்கும் வீடுகளுக்கும் எந்த பாதிப்பும் ஏற்படாது. மேலும், வேதா நிலையத்தில் சிறிய அளவிலான மாற்றங்கள்  மட்டுமே செய்யப்படும் என்பதனால் எவருக்கும் குறிப்பிடத்தக்க பாதிப்பு ஏற்பட போவது இல்லை. வேதா நிலையத்தை தவிர்த்து நகரத்தின் வேறு பகுதியில் இந்த நினைவு இல்லத்தை அமைப்பது என்பது அரசின் கொள்கை முடிவுக்கு எதிரானதாக அமையும். மேலும், இதனால் பொது மக்களின் உணர்வும் பாதிக்கப்படும். இந்த நில எடுப்பினால் பாதிக்கப்படக்கூடிய நபர்களோ, குடும்பங்களோ எவரும் இல்லை என்பதனால் பாதகமான சமூகத் தாக்கம் என்ற வினா எழவில்லை. இந்த நில எடுப்பு நடவடிக்கையால் சுற்றுச்சூழலுக்கு எந்த பாதிப்பும் ஏற்படப்போவது இல்லை என்பதானாள் சுற்றுச்சூழல் தாக்கம் குறித்த ஆய்வு மேற்கொள்வதற்கான அவசியம் எழவில்லை. இந்த நில எடுப்பு நடவடிக்கையால் பாதிக்கப்படக்கூடிய  குடும்பங்களோ, நபர்களோ எவரும் இல்லை என்பதனால் சமூகத் தாக்க மேலாண்மை திட்ட அறிக்கை தயாரிக்க வேண்டிய அவசியமும் எழவில்லை.

போக்குவரத்து நெரிசலை சமாளிப்பதற்கு டி.எம்.எஸ். மற்றும் செம்மொழிப் பூங்கா வளாகங்களில் உள்ள காலி இடங்களை வாகனங்கள் நிறுத்துவதற்கு பயன்படுத்திக்கொள்ளாம். செம்மொழிப் பூங்கா பகுதியில் உள்ள 33 கிரவுண்டு காலி  இடத்தில் 30 பேருந்துகளும், 60 சிற்றுந்துகளையும் ஒரே சமயத்தில் நிறுத்துவதற்கு போதுமான இடவசதி உள்ளது. அதே போன்று டி.எம்.எஸ் வளாகத்தில் உள்ள காலி இடங்களில் 60 சிற்றுந்துகள் வரை நிறுத்துவதற்கு போதிய இட வசதி  உள்ளது. கிண்டியில் உள்ள ஆளுநர் மாளிகையில் ஆன்லைன் வசதி மூலம் பார்வையாளர்கள் முன்பதிவு செய்து பார்க்கும் வகையில் ஏற்பாடுகள் செய்திருப்பதை போல போயஸ் கார்டனிலும் ஆன்லைன் மூலம் பார்வையாளர்களை பதிவு செய்து  அனுமதிப்பதால் போக்குவரத்து நெரிசலை எளிதாக சமாளிக்கலாம்.
மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதா தமிழகம் மற்றும் அல்லாது இந்தியா முழுவதும் உள்ள பெண்களுக்கு ஒரு முன்மாதிரியான தலைவராகவும் ஆணாதிக்கம் மிகுந்த சமூகத்தில் ஒரு பெண் எந்த அளவுக்கு வெற்றிகரமாக செயல்பட  முடியும் என்பதற்கும் எடுத்துக்காட்டாக திகழ்வதால் அவர் வாழ்ந்து மறைந்த வேதா நிலையத்தினை அரசு நினைவு இல்லமாக மாற்றுவது என்பது முற்றிலும் பொருத்தமான ஒரு நடவடிக்கையாகும்.இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

Tags : Jayalalithaa, Transferring ,Government, Memorial ,Home
× RELATED ஜெயலலிதா நினைவிடம் டிசம்பர் 5ம் தேதி திறப்பு