×

நலிந்த கலைஞர்களுக்கான உதவித்தொகை 3 ஆயிரமாக உயர்வு: முதல்வர் அறிவிப்பு

சென்னை: நலிந்த கலைஞர்களுக்கு மாத உதவித் தொகை ரூ.2  ஆயிரத்திலிருந்து ரூ.3 ஆயிரமாக உயர்த்தி முதல்வர் எடப்பாடி பழனிசாமி அறிவித்துள்ளார். தமிழ்நாடு இயல் இசை  நாடக மன்றத்தின் சார்பில் சென்னையில் நேற்று நடைபெற்ற கலைமாமணி விருதுகள் வழங்கும் விழாவில் முதல்வர் எடப்பாடி பழனிசாமி பேசியதாவது: இசை, கிராமியம்,  நாட்டியக் கலை என பல கலைகளின் பிறப்பிடமாக தமிழ்நாடு திகழ்கின்றது. கலைஞர்கள் எப்போதும் தங்கள் வாழ்வில் மகிழ்ச்சியுடன் வாழ்ந்திட வேண்டும் என்ற நோக்கத்தில் ஜெயலலிதா பல்வேறு நலத் திட்டங்களையும்,  விருதுகளையும் அறிவித்து, அவர்களை ஊக்கப்படுத்தி வந்தார். நலிந்த நிலையில் வாழும் 500 கலைஞர்களுக்கு மாதந்தோறும் 2 ஆயிரம் ரூபாய் நிதியுதவி வழங்கப்பட்டு வருகிறது.  14,063 கலைஞர்களுக்கு இத்திட்டத்தின் கீழ் மாதாந்திர நிதியுதவி வழங்கப்பட்டு வருகிறது. இளம் கலைஞர்களுக்கு ஆதரவும்  ஊக்கமும் அளிக்கும் திட்டத்தில் இதுவரையில் 1,972 இளம் கலைஞர்கள் பயனடைந்துள்ளனர்.

இதுவரையில், 1,594 கலைஞர்களுக்கு கலைமாமணி விருதுகள் வழங்கப்பட்டுள்ளது. அந்த வகையில், இன்று கலைத் துறைகளில் சிறந்து விளங்கும் 201 கலைஞர்களுக்கு கலைமாமணி விருது வழங்கப்பட்டுள்ளது. நம் நாட்டு விடுதலையடைய  கலைஞர்களின் பங்களிப்பு மிகவும் மகத்தானது. கலைஞர்கள் நிபுணத்துவத்தை தங்கள் கலைகளில் முறையாகக் கையாண்டு தாங்கள் சார்ந்த கலைக்கு மெருகேற்ற வேண்டும். கலைஞர்களின் கோரிக்கைகளை ஏற்று, கலைமாமணி விருது 3 சவரனுக்கு பதிலாக இனி 5 சவரனாக வழங்கப்படும். ஒவ்வொரு ஆண்டும் ஜெயலலிதா பெயரில் 3 சிறப்பு கலைமாமணி விருதுகள் சிறப்பு விருதுகளாக இனி வழங்கப்படும். நலிந்த  மூத்த கலைஞர்களுக்கு மாதந்தோறும் வழங்கப்படும் உதவித் தொகை ரூபாய் 2 ஆயிரத்திலிருந்து மாதந்தோறும் ரூபாய் 3 ஆயிரமாக உயர்த்தி வழங்கப்படும். இவ்வாறு பேசினார். 


Tags : 3 thousand ,scholarships,weaker artists, CM
× RELATED 3 ஆண்டு கால எல்எல்பி படிப்பில் சேர...