பாஜவுக்கு மாற்று கையாக அதிமுக செயல்படுகிறது: கனிமொழி குற்றச்சாட்டு

சென்னை: பாஜவுக்கு மாற்று கையாக செயல்படும் அதிமுக, தமிழகத்துக்கான நிதியை கேட்க தயங்குவது ஏன் என்று கனிமொழி கூறினார். சென்னை விமான நிலையத்தில் திமுக எம்பி கனிமொழி நிருபர்களுக்கு அளித்த பேட்டி: திமுக தலைவர் ஸ்டாலினுக்கு விளம்பரம் தேட வேண்டிய அவசியம் இல்லை. அவர், மக்கள் அனைவருக்கும் நன்கு தெரிந்தவர். நீலகிரியில் பாதிக்கப்பட்ட இடங்களை முதல்வர் எடப்பாடி நேரில் பார்க்காமல் இருப்பது ஏன், அவரை தடுப்பது  யார், அதற்கு முதலில் அவர் பதில் சொல்லட்டும். அங்கு மக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளார்கள். ஆனால் தமிழக அரசு எந்தவித நிவாரண நடவடிக்கையும் எடுக்கவில்லை என்பதற்காகத்தான் ஸ்டாலின் நேரில் சென்று பார்வையிட்டு,  பாதிக்கப்பட்ட மக்களுக்கு ஆறுதல் கூறினார்.

Advertising
Advertising

உதவிகளையும் வழங்கியுள்ளார். ஸ்டாலின் வந்த பின்னராவது, தமிழக அரசு இனிமேலும் காலம் தாழ்த்தாமல் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும். பாதிக்கப்பட்ட மக்களுக்கு மத்திய அரசு  நிதியுதவி அளிக்க திமுக தொடர்ந்து வலியுறுத்தும். ஆனால், மத்திய அரசின் திட்டங்களையும், மத்திய அரசு பாராளுமன்றத்தில் தாக்கல் செய்யும் மசோதாக்களையும்  ஒட்டுமொத்தமாக அதிமுக ஆதரிக்கிறது. அதனால் மத்திய அரசின்  நிதியை பெற்று தர அதிமுக அரசு முயற்சி எடுக்க வேண்டும். பாதிக்கப்பட்ட மக்களுக்காக நிதி கேட்க தயங்கக் கூடாது. பாஜ அரசுக்கு அதிமுக மற்றொரு மாறுகையாக செயல்பட்டுக் கொண்டிருக்கிறது. அப்படி செயல்படும் அதிமுக அரசு  தமிழக மக்கள் பாதிக்கப்படும்போது மத்திய அரசை வலியுறுத்தி நிதி கேட்க தயங்குவது ஏன்.  இவ்வாறு அவர் கூறினார்.

Related Stories: