நான்கு வீடுகளுக்கு உரிமையாளராக உள்ள மாநகராட்சி பெண் ஊழியர் சொத்துக்காக கொலையா?: சகோதரியிடம் போலீசார் தீவிர விசாரணை

சென்னை: சொத்துக்காக மாநகராட்சி பெண் ஊழியர் கொலை செய்யப்பட்டாரா என அவரது சகோதரியிடம் போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.சென்னை சைதாப்பேட்டை ஜோதிதோட்டம் பகுதியைச் சேர்ந்தவர் ஜெயா(35). இவரது தந்தை சென்னை மாநகராட்சியில் ஊழியராக இருந்தபோது இறந்துவிட்டார். இதனால் ஜெயாவுக்கு மாநகராட்சியில் கருணை அடிப்படையில் வேலை  கிடைத்தது. கணவருடன் ஏற்பட்ட தகராறில் தனியாக வசித்து வந்தார். பிறகு கணவர் இறந்த பின் அவரது குழந்தைகளையும் கணவர் வீட்டாரிடம் ஒப்படைத்துவிட்டு ெஜயா தனியாக வசித்து வந்தார். ஜெயா பெயரில் 4 வீடுகள் உள்ளதாக கூறப்படுகிறது.இந்நிலையில் நேற்று முன்தினம்  உடல் நிலை சரியில்லாமல் ஜெயா இறந்து விட்டதாக அவரது மூத்த சகோதரி தேவி அருகில் வசிப்போரிடம் தெரிவித்துள்ளார். ஜெயா மாநகராட்சி ஊழியர் என்பதால் சம்பவம் குறித்து சைதாப்பேட்டை  போலீசாருக்கு தெரிவிக்கப்பட்டது.அதன்படி போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து பார்த்தபோது, ஜெயா வாயில் ரத்தம் வழிந்த நிலையில் சந்தேகத்திற்கு இடமான வகையில் இறந்து கிடந்தார். பின்னர் போலீசார் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக ராயப்பேட்டை அரசு  மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். பிறகு சந்தேக மரணம் என போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
இதற்கிடையே ஜெயாவின் உடல் பிரேத பரிசோதனை முடிந்து நேற்று முன்தினம் வீட்டிற்கு கொண்டு வந்தபோது சொத்து தகராறு காரணமாக அவர்களின் உறவினர்களிடையே பிரச்னை ஏற்பட்டுள்ளது.

அப்போது, தேவி, தனது சகோதரி இறப்பு குறித்து முன்னுக்கு பின் முரணாக பேசியதால் சந்தேகமடைந்த அப்பகுதி மக்கள் போலீசாருக்கு தகவல் கொடுத்தனர். அதன்படி போலீசார் தேவியிடம் விசாரணை நடத்தினர். அப்போது அவர் திடீரென மயக்கமடைந்தார். உடனே போலீசார் தேவியை மீட்டு சிகிச்சைக்காக ராயப்பேட்டை அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர். தேவியின் நடவடிக்கையில்  சந்தேகமடைந்த போலீசார் ஜெயா வீட்டின் அருகே உள்ள சிசிடிவி கேமரா பதிவுகளை பெற்று விசாரணை நடத்தினர்.
அப்போது, ஜெயா இறப்பதற்கு முன் ஞாயிற்று கிழமை இரவு இரண்டு மர்ம நபர்கள் அவரது வீட்டிற்கு வந்து சென்றது தெரியவந்தது. மறுநாள் அதிகாலையில் தான் ஜெயா இறந்துவிட்டதாக தேவி தெரிவித்தார். இதனால் வீட்டிற்கு வந்த 2 மர்ம  நபர்கள் யார் என்பது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். ஜெயாவின் பிரேத பரிசோதனை அறிக்கை வந்த பிறகு தான் கொலை செய்யப்பட்டாரா அல்லது உடல் நிலை காரணமாக உயிரிழந்தாரா என்பது குறித்து தெரியவரும் என்று போலீசார் தெரிவித்துள்ளனர்.

Tags : Owner,four homes, Municipal,woman , property?
× RELATED அரசு உத்தரவின்படி புதிய சொத்துவரி...