×

இன்ஸ்பெக்டரை ஒருமையில் பேசிய விவகாரம் காஞ்சி கலெக்டருக்கு ஐபிஎஸ் அதிகாரிகள் சங்கம் கண்டனம்

சென்னை: அத்திவரதர் பாதுகாப்பு பணியின்போது இன்ஸ்பெக்டரை பொதுமக்கள் முன்னிலையில், ஒருமையில் பேசியதற்காக காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியருக்கு ஐபிஎஸ் அதிகாரிகள் சங்கம் கண்டனம் தெரிவித்துள்ளது. காஞ்சிபுரம் வரதராஜ பெருமாள் கோயிலில் 40 ஆண்டுகளுக்கு ஒருமுறை நடைபெறும் அத்திவரதர் விழா கடந்த ஜூலை 1ம் தேதி முதல் நடந்து வருகிறது. அத்திவரதரை காண தமிழகம் மற்றும் நாடு முழுவதிலும் இருந்து தினமும் 2 லட்சத்துக்கும் மேற்பட்ட மக்கள் பார்க்க வருகின்றனர். இதனால் தமிழக காவல் துறை சார்பில் தினமும் சுழற்சி முறையில் ஐஜி மற்றும் 3 டிஐஜிக்கள் தலைமையில் 12ஆயிரத்துக்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

அந்த வகையில், கடந்த சனிக்கிழமை அன்று மிக முக்கிய பிரமுகர்கள் வரும் பாதையில் பொதுமக்கள் அனுமதித்ததாக காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர் பொன்னையா பாதுகாப்பு பணியில் இருந்த இன்ஸ்பெக்டரை, பொதுமக்கள் முன்னிலையில் ஒருமையில் கடுமையான வார்த்தைகளில் பேசி திட்டினார். இது குறித்த வீடியோ சமூக வலைத்தலங்களில் வைரலாக பரவியது. இதையடுத்து மாவட்ட ஆட்சியர் செயலுக்கு மாநில மனித உரிமை ஆணையம் தானாக முன்வந்து வழக்கை விசாரணைக்கு ஏற்றுக்கொண்டனர். மேலும், சம்பவம் குறித்து தலைமை செயலாளர் மற்றும் தமிழக டிஜிபி உரிய விளக்கம் அளிக்க வேண்டும் என்று நோட்டீஸ் அனுப்பி உள்ளது.

இந்நிலையில், ஐபிஎஸ் அதிகாரிகள் சங்கம் காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர் பொன்னையா செயலுக்கு கண்டனம்  தெரிவித்து அறிக்கை நேற்று வெளியிட்டுள்ளது.அந்த  அறிக்கையில் கூறியிருப்பதாவது: ‘காஞ்சிபுரம் அத்திவரதர் திருவிழா அமைதியாகவும் சுமுகமாகவும் நடைபெற ேவண்டும் என்பதற்காக முன் எப்ேபாதும் இல்லாத அளவிற்கு பாதுகாப்பு ஏற்பாடுகள் காவல் துறை சார்பில் செய்யப்பட்டுள்ளது. இதில் பணிபுரிந்து வரும் அனைத்து அதிகாரிகளுக்கும் பாராட்டுகளை தெரிவித்து கொள்கிறோம். சமூகத்தின் அனைத்து அமைப்பினரும் அத்திவரதர் பாதுகாப்பு பணியில் உள்ள காவல் துறையினருக்கு மதிப்பு அளிக்க ேவண்டும் என்று நாங்கள் எதிர்பார்கிறோம்’.

Tags : IPS Officers Association condemns ,Kanchi collector
× RELATED பஞ்சாப் சட்டமன்ற தேர்தலில் ஆம்ஆத்மி...