முதல்கட்டமாக கேரளாவுக்கு 10 லட்சம் நிவாரணப்பொருட்கள் பொறுப்பிழந்து, பதவியில் இருப்பதை மறந்து கீழ்த்தரமாக பேசுவதா?

சென்னை: “கேரள மாநிலத்துக்கு திமுக சார்பில் 10 லட்சம் மதிப்பிலான நிவாரணப் பொருட்கள் முதல்கட்டமாக அனுப்பப்படுகிறது என்றும், முதல்வர் பொறுப்பிழந்து-பதவி என்ற ஒன்றை மறந்து கீழ்த்தரமாக பேசி வருகின்றார்” என்றும் மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார். திமுக தலைவரும், சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவருமான மு.க.ஸ்டாலின் தலைமையில், கேரளாவில் கனமழையாலும், பெருவெள்ளத்தாலும் பாதிக்கப்பட்ட மக்களுக்கு, மேற்குமாவட்ட திமுக சார்பில் நிவாரணப் பொருட்கள் வழங்கப்பட்டது. அப்போது மேற்குமாவட்ட திமுக செயலாளர் ஜெ.அன்பழகன் எம்எல்ஏ உள்ளிட்ட நிர்வாகிகள் உடனிருந்தனர். இதை தொடர்ந்து, மு.க.ஸ்டாலின் நிருபர்களுக்கு பேட்டியளித்தார். அவர் கூறியதாவது: கேரள மாநிலம் கடும் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டு, அந்த மாநிலத்தில் பல்வேறு பகுதிகளில் இருக்கக்கூடிய மக்கள் கடும் துன்பத்துக்கும், துயரத்துக்கும் ஆளாக்கப்பட்டிருக்கிறார்கள்.எனவே, இதுகுறித்து நான் நேற்றைய முன்தினம்  திமுக சார்பில் முடிந்தளவிற்கு அவர்களுக்கு உதவி செய்யவேண்டும் என்ற அடிப்படையில் ஒரு வேண்டுகோள் விடுத்திருந்தேன்.

அந்த வேண்டுகோளை ஏற்று, இன்று முதல்கட்டமாக, சென்னை மேற்குமாவட்டம் திமுக சார்பில் கேரள மாநிலத்திற்காக, அங்கு பாதிக்கப்பட்டிருக்கக்கூடிய மக்களுக்கு நிவாரணப் பொருட்களாக 400 மூட்டை அரிசி, 1,880 புடவைகள், 1,185 லுங்கிகள், 800 பெட்ஷீட்கள், 500 மில்லியன் லிட்டர் கொண்ட 2,000 வாட்டர் பாட்டில்கள், 8 பெரிய பெட்டி அளவில் பிஸ்கட் பாக்கெட்டுகள் மற்றும் 38 டிபன் பாக்ஸ்கள் என ஏறக்குறைய 10 லட்ச ரூபாய் மதிப்புள்ள நிவாரணப் பொருட்களை அறிவாலயத்தில் ஒப்படைத்திருக்கிறார்கள். தொடர்ந்து பல்வேறு மாவட்டங்களிலிருந்து இதுபோன்ற நிவாரணப் பொருட்கள் வரவிருக்கிறது.கேரள மாநிலத்தில் இருக்கக்கூடிய திமுக நிர்வாகிகளை நான் சென்னைக்கு அழைத்த காரணத்தினால், இன்று (நேற்று) அவர்கள் எல்லோரும் வந்திருக்கிறார்கள். எனவே, நிவாரணப் பொருட்கள் அனைத்தையும் இன்றோ அல்லது நாளையோ ரயில் மூலமாக அனுப்பி வைப்பதற்கான ஏற்பாடுகளை திமுக முன்னின்று செய்துகொண்டிருக்கின்றது.இவ்வாறு அவர் கூறினார்.
பின்னர் நிருபர்கள் கேட்ட கேள்விகளுக்கு மு.க.ஸ்டாலின் அளித்த பதில் வருமாறு:

பல ஆண்டுகளாக, மத்திய அமைச்சராக இருந்த ப.சிதம்பரம் தமிழகத்திற்கு ஒன்றும் செய்யவில்லை. பூமிக்கு பாரம் என்று முதலமைச்சர் ஒரு கருத்தை சொல்லியிருக்கிறார். அதுபற்றி தங்களின் பதில்? முதலமைச்சர், அவர் தகுதிக்கு மீறி, நீலகிரி சென்று வந்த என்னைப் பற்றி என்ன சொன்னாரென்றால் சீன் காட்ட, விளம்பரத்திற்காகப் போனேன் என்று சொன்னார். நான் நேற்றைய தினமே சொல்லியிருக்கிறேன், அவர் அமெரிக்காவிற்கும், லண்டனிற்கும் செல்வதாக ஒரு செய்தி வந்திருக்கிறது. எனவே, அவர் அமெரிக்காவிற்கும், லண்டனிற்கும் சீன் காட்டத்தான் செல்கிறாரா என்று சொல்வதற்கு எனக்கு ரொம்ப நேரம் ஆகாது. ஆனால், முதலமைச்சராக இருக்கக்கூடிய ஒருவர், அவரை மாதிரி ஒரு பொறுப்பிழந்து, பதவி என்ற ஒன்றை மறந்து இவ்வளவு கீழ்த்தரமாக பேசுவதற்கு நான் நிச்சயமாக போகமாட்டேன். அதுமட்டுமல்ல, நேற்றைய தினம் (நேற்று முன்தினம்), கோவைக்கு வந்திருக்கிறார். அப்போது, அருகில்தான் ஊட்டி இருக்கிறது. நியாயமாக அவர் சென்றிருக்க வேண்டும். ஆனால், இதுவரையில் அவர் போகவில்லை. இதற்கு எந்தவிதமான பதிலும் சொல்லவில்லை. முதலில் அவர் இதற்கெல்லாம் பதில் சொல்லட்டும். அதன்பிறகு, நான் பதில் சொல்கிறேன். இவ்வாறு அவர் பதில் அளித்தார்.

தலைவர்களை விடுவிக்க வேண்டும்

திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தனது டிவிட்டர் பதிவில் அவர் கூறியிருப்பதாவது: ஜம்மு காஷ்மீர் மாநில அரசியல் தலைவர்கள் மற்றும் அவர்களின் குடும்பத்தினரை கைது செய்து வீட்டு காவலில் வைத்துதிருப்பதை ஏற்றுகொள்ளமுடியாது. எனவே, மத்திய அரசு அவர்களை தங்களின் கட்டுப்பாட்டில் வைத்திருக்காமல் இந்த விவகாரத்தில் உடனடி நடவடிக்கை எடுத்து அவர்களை விடுதலை செய்து சுமூகமான சூழலை உருவாக்க வேண்டும். இவ்வாறு பதிவிட்டுள்ளார்.

நிவாரண பொருட்கள் அனுப்புங்கள்

திமுக தலைவர் மு.க.ஸ்டாலின்  தனது முகநூல் பதிவில் கூறியுள்ளதாவது: கேரள மக்களுக்கு உதவும் வகையில் பொதுமக்களும், திமுக நிர்வாகிகளும், தொண்டர்களும் அரிசி உள்ளிட்ட உணவுப் பொருட்களை திமுக தலைமைக் கழகமான அண்ணா அறிவாலயத்திற்கு அனுப்பி வைக்குமாறு கேட்டுக்கொள்கிறேன்.

Tags : first time in Kerala, 10 lakh relief ,charge, office and speak lowly?
× RELATED பெரம்பலூர் மாவட்டத்தில் தொடர் மழை பச்சமலையில் முதல்முறையாக நிலச்சரிவு